திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த  உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கேரள அரசு. இது தமிழக விவசாயிகளிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது முல்லை பெரியாறு அணையில்  534 கன அடி வீதம் இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை உள்ள நிலையில். தமிழகத்தின் உரிமையை கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது கேரள மாநில அரசு.

கேரள மாநில அரசின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும், தமிழக அரசு இதுகுறித்து கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில், நீர் தேங்கி வைப்பது தொடர்பாக தமிழகம் கேரளா இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீரை திறக்க உரிமை பெற்று கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  முல்லை பெரியாறு அணையில், 2014, 2015, 2018-ம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.

ஆனால்,  பெரியாறு அணை விவகாரத்தில்  பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்கக்கூடாது என்பதில் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. இதுகுறித்து அவ்வப்போது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தும், அவை தள்ளுபடி செய்யப்பட்டே வருகிறது.

இந்த நிலையில், நவம்பர் 11-ம் தேதி வரை 139 புள்ளி 5 அடியாக நீடிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தற்போ து138 புள்ளி 7 பூஜ்ஜியம் அளவாக உள்ள நிலையில் கேரளா அரசு தண்ணீரை திறந்து விட்டுள்ளது.  அணையிலிருந்து 2 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீரை திறந்துவிட்டுள்ளது.

மொத்தமுள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகு வழியாக, விநாடிக்கு 534 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணையை சென்றடையும்.

உபரி நீர் திறப்பு நிகழ்வில், கேரள நீர்வளத்துரை அமைச்சர் ரோஷி அகஸ்டின், அமைச்சர் திரு. ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உச்சநீதிமன்றம் கூறிய உத்தரவை மீறி கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது.  அதுபோல கேரள திரையுலகினர் உள்பட பலர் முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசோ, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது.  இது தென்மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.