வரும் 6ம் தேதி சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேளர தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்றுக்கொண்டு இருக்கின்றனர். மகரவிளக்கு காலம் முடிந்து ஜனவரி 21ம் தேதி நடை அடைக்கப்படும். இச்சூழலில் கொச்சிக்கு வரும் 5ம் தேதி வருகை தரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 6ம் தேதி சபரிமலை வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 1973ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவரான வி.வி கிரி சபரிமலைக்கு சென்றார். அதன் பின் செல்லும் இரண்டாவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கேரள அரசு குறுகிய காலத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது கடினம் என தெரிவித்தது. இதனையடுத்து, குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு அரசுக்குக் கிடைத்திருக்கிறது. அவரது பயணம் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவரது பயணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.