கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சி சென்ற பேருந்தில் பயணம் செய்த மாடல் அழகி நந்திதா சங்கரா-விடம் அதே பேருந்தில் தன்னுடன் பயணம் செய்த சாவத் ஷா என்ற வாலிபர் பாலியல் சிலுமிஷத்தில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக ‘தி நியூஸ் மினிட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சாலக்குடி அருகில் உள்ள அங்கமலே பேருந்து நிறுத்தத்தில் ஏறிய சாவத் ஷா பெண்கள் மற்றும் கர்பிணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் தனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே வந்து அமர்ந்ததாக நந்திதா கூறியுள்ளார்.

நந்திதா சங்கரா

சிறிது தூரம் சென்றபோது தனது இடுப்பில் ஒரு கைவைத்த அந்த வாலிபர் அவரது மற்றொரு கையை அவரது ஆணுறுப்பில் வைத்து அதனை அவர் வைத்திருந்த பையினால் மறைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தான் ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது போல் இருந்ததாகவும் சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் பக்கம் திரும்பிய போது அவர் தனது ஜீன் பேண்ட் ஜிப்-பை திறந்திருந்ததாகவும் கூறிய நந்திதா அவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஓடும் பேருந்தில் பெண்கள் இருக்கையில் பெண்களுக்கு நடுவே அமர்ந்து சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த பேருந்து நடத்துனரிடம் காவல் நிலையத்தில் நிறுத்தும்படி நந்திதா கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல் நிலையம் நோக்கி ஓட்டுநர் பேருந்தை செலுத்திய நேரத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார்.

பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை சுற்றிவளைத்து பிடித்தது மட்டுமல்லாமல் அங்கமலே பேருந்து நிறுத்தத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடும்பசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செவ்வாயன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து கோழிக்கோட்டைச் சேர்ந்த அந்த வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளையில், பத்து நிமிட பயணத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் பதைபதைக்க வைக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த வாலிபரின் செய்கையை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த நந்திதா அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.