சாஸ்தா திருக்கோயில் , அச்சன்கோவில், கொல்லம், கேரளா
இங்குள்ள 18 படிக்களைத் தாண்டி சென்றால் அச்சன் கோயில் அரசனின் சன்னிதானம். இங்கே சுவாமிக்குப் பெயர் மணிகண்ட முத்தைய்யன். பூர்ணா புஷ்கலா ஸமேதனாக விளங்கும் மூர்த்தி. இங்கே சுவாமி க்ரஹஸ்த கோலத்தில் இருமனைவியருடன் காட்சி தருகிறார். சுவாமி அமர்ந்த கோலத்தில் விளங்க- இருமருங்கிலும் பூரணையும், புஷ்கலையும் நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறார்கள். அச்சன் கோயிலில் சுவாமிக்குக் குதிரை வாகனம் ப்ரதானம். எல்லா சாஸ்தா ÷க்ஷத்ரங்களிலும் அச்சன் கோயிலுக்கு உள்ள பெருமை வேறு கோயிலுக்குக் கிடையாது. கேரளத்திலுள்ள பெரும்பாலான சாஸ்தா ஆலயங்கள் பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவை. மற்ற எல்லா ÷க்ஷத்திரங்களிலும் உள்ள (பரசுராமர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல விக்ரஹம் ஆகும். சுவாமி சன்னதிக்குப் பின்னால் சற்று உயர்ந்ததொரு தலத்திலே இருக்கிறது யக்ஷிக்காவு.
சாஸ்தாவின் சன்னதியில் விளையாடிவரும் இந்த தேவி ராஜமாதங்கியின் அம்சம் கொண்டவள். இந்த யக்ஷிக்கு வெறிக்கலி என்று பெயர். இவள் உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி. இங்கே இருந்த யாவரையும் ஹிம்ஸித்த போது ஹரிஹரபுத்ரன் ஸ்வர்ண சங்கிலியால் இவளைப் பந்தனப் படுத்தி, அவளது தெய்வாம்சத்தை நினைவூட்டி, தன் பரிவாரங்களில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டான்.
தல சிறப்பு:
சபரிமலையைப் போல் 18 படிகளுடன் சாஸ்தா அருள்பாலிப்பது சிறப்பு.
பொது தகவல்:
இங்கு கருப்பசாமி, கருப்பி, நாக யக்ஷி, யக்ஷிகாவு சன்னதிகள் உள்ளன. கருப்பனை வணங்கிய பின்பே சாஸ்தாவைக் காணச் செல்ல வேண்டும்.
தலபெருமை:
இந்தப் பகுதியில் யாருக்குப் பாம்பு கடித்தாலும், அவர்கள் டாக்டரையும் நாட்டு வைத்தியரையும் தேடி ஓடுவதில்லை. இங்கே ஒரு மஹா வைத்யர் இருக்கிறார். பாம்புக்கடி பட்டவரை இங்கே தான் கொண்டு வருகிறார்கள். பாம்புக்கடி பட்டவரை எந்த நேரத்தில் கோயிலுக்குக் கொண்டு வந்தாலும், கோயிலைத் திறக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பாம்பு கடித்திருந்தாலும் மேல்சாந்தி சாஸ்தாவின் சன்னதியிலிருந்து தீர்த்தமும் சுவாமியின் ப்ரஸாத சந்தனமும் எடுத்து கடிபட்ட இடத்தில் பூசி தீர்த்தத்தை தெளிக்கிறார். அவ்வளவுதான்.. விஷக்கடிபட்ட நபர் பழைய நிலைமைக்கே வந்துவிடுகிறார்.
தல வரலாறு:
ஒரு முறை அச்சன் கோவிலில் உத்ஸவ வேளையின் போது சாஸ்தாவின் திருவாபரணப் பெட்டி கோயிலில் இருந்தது. இரவு வேளையில் கோயிலில் புகுந்த கள்வர் கூட்டம் திருவாபரணப் பெட்டியைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதுது. மறுநாள் காலை வந்த மேல்சாந்தி அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்களும் கூடிவிட அடுத்து என்ன செய்வது என்பது யாருக்கும் புரியவில்லை. இதற்குள் கூட்டத்தில் ஒருவர். அச்சன் கோயில் காடு அத்தனையும் கருப்பனின் கோட்டை என்பார்களே…. கருப்பனையும் மீறி இப்படிக் கொள்ளை நடந்திருக்கிறதே… என்று வேடிக்கை கலந்த குரலில் சொன்னார்.
மறுகணமே… கூட்டத்தில் ஒருவருக்குக் கருப்பனின் ஆவேசம் ஏற்பட்டது. என் ஆதிக்கத்தில் திருட்டு நடக்காது என்று கம்பீரமாக முழங்கிய கருப்பன் காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு சென்று பாருங்கள் என்றார். ஜனங்களும் ஆலய நிர்வாகிகளும் ஓடிச் சென்று அங்கு பார்த்தபோது… முதல் நாள் இரவு திருட வந்திருந்த கள்வர் கூட்டம், ஏன் எதற்கு என்றே தெரியாமல், தாங்கள் களவாடி வந்த திருவாபரணப் பெட்டியை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு அந்த மரத்தைச் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் மதியம் வரை இப்படிச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவனின் ஆபரணமும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டது. அந்தக் கள்வர்க்கும் மனம் திருந்தி அச்சன் கோயில் ஆண்டவனுக்கே ஊழியம் செய்து வாழலானார்கள்.