டெல்லி:
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 6,868 பேர் குணமடைந்துள்ளனர், இந்தியாவிலேயே மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வகையான மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. அதன்படி, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள பகுதி சிவப்பு மண்டலமாகவும், மிதமாக உள்ள பகுதி ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத பகுதி பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களு டன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, , கடந்த 7 நாட்களில் இருந்து 80 மாவட்டங்களில் புதிய கொரோனா வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம் சிவப்பு மண்டலத்தில் இருந்து விடுபட்டுள்ளது. தமிழகத்திலும் ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து விடுபடுகிறது.
இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள பட்டியலில், கடந்த 22ந்தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கும், நேற்றைய நிலவரப்படி (27ந்தேதி) நோயில் இருந்து குணமடைந்துள்ளோர் சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில்உள்ளது. 2வது இடத்தில்அரியானாவும், 3வது இடத்தில் தமிழகமும் உள்ளது.
கடந்த 5 நாட்களில் கேரளாவில் மேலும் 4 சதவிகிதம் உயர்ந்து கொரோனா பாதிப்பில்இருந்து விடுபட்டுள்ளோர் 74 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
அரியானாவில் கடந்த 5 நாட்களில் 60 சதவிகிதத்தில் இருந்து கூடி 71 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 41 சதவிகிதமாக இருந்து வந்த குணமானோர் எண்ணிக்கை தற்போது 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை நேற்றுவெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக உயிரிழப்பு இல்லாததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 81 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 1101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் அதிகபட்சமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 26 பேர் குணமடைந்துள்ளனர். 29, 797 பேர் விடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மையங்களில் 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த ஈரோடு, கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக எந்த தொற்று பரவலும் உறுதி செய்யப்படவில்லை. இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 70 பேரும் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த ஈரோடு, தற்போது பச்சை மண்டலமாக மாறி உள்ளது.