திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகையில் அம்மாநிலத்து மக்கள் இது குறித்து அதிகம் கவலை இன்றி உள்ளனர்.
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதன் பிறகு கொரோனா பாதிப்பில் அகில இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்த கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்தது. இந்தியாவுக்கே கேரள மாநிலம் அப்போது மாதிரி மாநிலமாக இருந்தது., ஆனால் அதன் பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 4 மாதங்களில் கேரளாவில் மற்ற எந்த மாநிலங்களையும் விட கொரோனா பாதிப்பு அதிக அளவில் அதாவது 7 லட்சத்தைத் தாண்டி உள்ளது. குறிப்பாகக் கடந்த 45 நாட்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு கேரள மாநிலத்தில் மிக மிக அதிகமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை அகில இந்திய அளவில் மிகவும் அதிகமாக அதாவது 30% அதிகமாகக் கேரளாவில் உள்ளது,.
ஆனால் அதே வேளையில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. உண்மையில் மற்ற பல மாநிலங்களை இவிட கேரளாவில் மரணமடைந்தோர் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதுவரை கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 8.11 லட்சங்கள் ஆகும். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் கேரளா 5 ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3.3 ஆயிரம் ஆகி 12 ஆம் இடத்தில் உள்ளது.
இது குறித்து கேரள மாநில சுகாதார அமைச்சர் கே கே ஷைலஜா, “மற்ற மாநிலங்களில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து பின் இறங்கியது. ஆனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் கேரளாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன் அதிகம் பேர் உயிர் இழக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேரளாவில் தினசரி கொரோனா மரண எண்ணிக்கை 35 ஐ தாண்டியது இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயதானோர் மற்றும் வேறு உடல்நலக் குறைபாடு உள்ளோர் ஆவார்கள். மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே கேரள அரசின் சாதனை ஆகும். இவ்வளவு அதிகமான மக்கள் தொகை உள்ள எங்கள் மாநிலத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 0.5%க்கும் அதிகமாகவே உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மற்ற மாநிலங்களில் மிகவும் குறைந்து வருகிறது. வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ககன்தீப் கங், “இந்த எண்ணிக்கை சரியானதா என ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. ஏனெனில் முதல் கட்டத்தில் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை நன்கு குறைந்தது. என்பதால் பலருக்குத் தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்பதே பொருள் ஆகும்.
அதிக அளவில் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் மிகக் குறைவானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் உள்ளது. ஆகவே குறைவானவர்களுக்கு தற்போது பாதிப்பு உண்டாகி வருகிறது. இதுவே தற்போது கேரளாவில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் மற்ற மாநிலங்களுக்கு எண்ணிக்கை குறைவதற்கும் முக்கிய காரணம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருப்பினும் கேரளாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகம் கவலைப்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக மற்றும் தீவிரமாக எடுத்து வருகிறது எனவே கூறலாம். மொத்தத்தில் பாதிப்பு விரைவில் குறையும் என்னும் நம்பிக்கை மக்களிடத்திலும் அதிகம் காணப்படுகிறது என்பதே உண்மையாகும்.