திருவனந்தபுரம்

கேரள சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு உடல் உறுப்புக்களை தானம் செய்ய அரசு அனுமதி வழங்க உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியான சுகுமாறன் தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானம் அளிக்க முன் வந்தார்.   ஆனால் அரசு அதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் ஆனதால் அனுமதி வரும் முன்பே நோயாளி மரணம் அடைந்து விட்டார்.

இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.   இந்தக் கூட்டத்தில் கேரள மாநில சிறைக்கைதிகள் தங்கள் உடல் உறுப்புக்களை நன்கொடையாக அளிக்க அனுமதி அளிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.   அத்துடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

”கேரள சிறையில் உள்ள கைதிகள் தங்கள் உடல் உறுப்புக்களை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தானம் செய்ய முடியும்.  இதற்கான ஒப்புதலை அவர்களுக்கு தண்டனை அளித்த நீதிமன்றமும் மாநில மருத்துவ மையமும் அளிக்க வேண்டும்.

இந்த உறுப்பு தான அறுவை சிகிச்சைக்காக கைதிகள் மருத்துவமனையில் தங்கும் காலம் பரோல் காலமாக கருதப் படும்.  கைதிகளுக்கான  மருத்துவச் செலவுகளை சிறைத்துறை ஏற்றுக் கொள்ளும்.

மேலும் உறுப்பு தானம் செய்த கைதிக்கு இதற்காக தண்டனைக் காலத்தில் எந்த ஒரு சலுகையும் தரப்படமாட்டாது”  என்னும் நிபந்தனைகளை கேரள அரசு அறிவித்துள்ளது.