திருவனந்தபுரம்: கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும் என மத்திய அரசுக்கு கேரளா அரசு கடிதம் எழுதி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தொற்று பாதிப்பில் கேரளா 2வது இடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 4070 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10லட்சத்துக்கு 34 ஆயிரத்து 658 ஆக உயர்நதுள்ளது. இதுவரை 4090 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 9லட்சத்து 71ஆயிரத்து 975 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 58,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது வரை 94 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. . இந்த நிலையில், முதியவர்கள் அதிகமாக வசிக்கும் கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் தடுப்பூசி வழங்க வேண்டும் எனகேரள சுகாதார துறை மந்திரி சைலஜா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.