திருவனந்தபுரம்:
கேரளாவில் தூதரகம் பெயரில் அனுப்பப்பட்ட  பார்சலில் சுமார் 30 கிலோ தங்கம் கடத்தல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் சிக்கி உள்ள நிலையில்,  முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு செய்வதறியாது திகைத்து உள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐ கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தி வருகிறார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து பார்சல்கள் வருவது வழக்கம். இதுபோன்ற தூதரக பார்சகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடுவது இல்லை.  ஆனால், இதுபோன்ற பார்சல்கள் மூலம் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும் உண்டு.
இந்த மாதமும் வழக்கம்போல தூதரகத்துக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார். இதற்கிடையில்,இது போன்று தூதரகங்களுக்கு வரும்  பார்சல்களை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சிறப்பு அனுமதி பெற்றனர்.
அதன்படி, இநத மாதம்  திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி  அடைந்தனர். இதுகுறித்த விசாரணையில்,  கேரள அரசின்  தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க என்பவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸரித் கைது செய்யப்பட்டார். அவர்  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது தெரிய வந்தது.
இந்த தங்கக் கடத்தலில் இவர்கள் மட்டுமின்றி மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று குற்றம்சாட்டப்பட்டது.  இதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் என்பவரும் காவல்துறை கஷ்டடிக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியர் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர் எப்படி,  கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறைகளுடன் இணைந்துள்ள நிறுவனங்களில் ஒன்றிற்கான தொடர்பு அதிகாரியாக இருந்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உளளது.

இதுகுறித்து  கேரளா மாநில எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பினராயி அரசு மீது கடுமையாக  குற்றம் சாட்டியதுடன்,  மாநில  ஐடி முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாகவும், தங்க கடத்தலில் சிக்கிய ஊழியர்களை  காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதுடன்,  தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்க கடத்தலுக்கு துணையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். தங்கம்  கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனால் செய்தவறியாது திகைத்த மாநில அரசு,  தற்காலிகமாக ஐடி முதன்மை செயலாளர் சிவசங்கரை பதவியில் இருந்து நீக்கி  நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்,  ஊழியரின் ஒப்பந்தம் மாநில அரசால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் மாநிலத்தில் பிரளயமாக உருவெடுத்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் வீட்டித்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட, ஆவணங்களின் மூலம், அவர் ஏற்கனவே  யு.ஏ. ஈ நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது.
தங்க கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளர் வேலை கிடைத்தது எப்படி? என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் மாநிலத்தில் பூதாகரமாக கிளம்பி உள்ள நிலையில் பினராயி விஜயன் அரசு செய்தவறியாமல் திகைத்துபோய் உள்ளது.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர்  ரமேஷ் சென்னிதாலா தனது ட்விட்டர் பதிவில்  பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில்,  தங்கம் கடத்தலுக்கு ஐக்கிய அரபு அமிரகத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது “இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் . இந்த மோசமான செயல் குறித்து விசாரிக்க உங்கள் உடனடி தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.