பனாஜி
மலையாள திரைப்பட இயக்குனர் சணல்குமார் சசிதரன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் தற்போது நடை பெற்ற சர்வதேச திரைவிழாவில் இந்தியன் பனோரமா எனும் பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப் பட்டன. இதில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கிய எஸ் துர்கா என்னும் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்பு அந்தப் படமும் மற்றும் நியூட் என்னும் மராட்டிப் படமும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.
செக்ஸி துர்கா எனப் பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளானதால் பெயரை எஸ் துர்கா என படக்குழுவினரால் மாற்றப்பட்டது. அப்படி இருந்தும் இந்தப் படம் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதால் இந்தப் படத்தின் இயக்குனர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதி மன்றம் இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் இறுதி நாளான நேற்று வரை இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. இதையொட்டி இயக்குனர் சணல்குமார் சசிதரன், “இந்தப் படம் திரையிடப் படாததால் எனக்கு வருத்தமில்லை. சங் பரிவார் ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்பதை தற்போது அனைவரும் புரிந்துக் கொண்டனர். தனக்கு பிடிக்காத எதையும் எவ்வாறு மோடி அரசு பழி வாங்கும் என்பது இப்போது தெரிந்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது. தற்போது இந்நிகழ்வினால் அரசை ஆதரிப்பவர்களும் இந்த அரசின் போக்கினால் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியது அனைவருக்கும் தெரிய வருகிறது.” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.