திருவனந்தபுரம்

கேரளாவில் இருந்து வெளிநாடு சென்றோர் கேரளாவுக்குத் திரும்ப விரும்பினால் இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டார்.  அதன்பிறகு அம்மாநிலத்தில் அதிக அளவில் பாதிப்புக்கள் காணப்பட்டன   இதனால் கேரள மாநிலம் பல நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர் திரும்ப வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தக்வல்கல் வந்துள்ளன.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் “ஊரடங்கு முடிந்து விமானச் சேவை தொடங்கிய பிறகு வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர் திரும்பி வர விரும்பினால் நோர்கா – ரூட்ஸ் இணைய தளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் கேரள அரசு தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கும்.  வெளிநாட்டில் இருந்து வருவோர் சோதிக்கப்பட்டு நல்ல உடல்நிலையுடன் இருந்தால் 14 நாட்கள் தனிமையில்  இருக்க வேண்டும்.  கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் கொரோனா நல மையத்துக்கு அனுப்பி சிகிச்சை பெற வேண்டும்.   ஓட்டல் மற்றும் உல்லாச விடுதிகளில் தனிமையில் இருக்க விரும்பினால் அவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு இருக்கலாம்: என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஊரடங்கு முடிந்து விமானச் சேவை தொடங்கும் போது சுமார் 3 முதல் 5 லட்சம் கேரள மக்கள் திரும்பி வர தயாராக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  இவர்களில் பெரும்பாலானோர் அரபு நாட்டில் இருந்து வர உள்ளனர்.