திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தலைநகர் டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கான, கேரளா என பல மாநிலங்களில் இந்த போக்கு அதிக அளவில் காணப்படுகிறது. மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுவதுடன், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டு அடாவடி செய்கின்றனர். இதனால், மாநில அரசின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கேரள மாநில ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மாநிலத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க ஆளுநர் விரும்புகிறார். ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பதாக உள்ளது. இதனால் கேரள ஆளுநர் ஆரிப் கானை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.