திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழகஅரசு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து, இன்று கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழா திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவருக்கும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பினராய் விஜயன் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே புதுமுகங்களாக உள்ளனர். மேலும், இவரது அமைச்சரவையில் பினராய் விஜயன் மருமகன் இடம்பெற்றுள்ளார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.