டெல்லி: பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று முற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறியதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளோ தொழிற்சாலைகளோ இருக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது நடைமுறைப்படுத்த முடியாத தீர்ப்பு என கேரள அரசு தெரிவித்து உள்ளது. கேரளாவில் வனத்தை ஒட்டிய பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கை யில் மக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது அரசுக்கு இயலாத காரியம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கேரள அரசு, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.