திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து,   இன்று  அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த  கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் களமச்சேரி என்ற இடத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது  அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  கூடியிருந்த அந்த  இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதாலும், நமது நாட்டுக்கு எதிராக பேசி வருவதாக குற்றம் சாட்டியதுடன்,  கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை, அந்த சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் ராஜ துரோகம், திருச்சபையின் செயல்பாடுகள் பிடிக்காததால் குண்டுவைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து,  அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இச்சம்பவத்தில் இருவர் உயிர் இழந்துள்ளனர், 41 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு துறை ஏடிஜிபி குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு தலைமை வகிப்பார்.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த 20 பேர் அடங்கிய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்தார். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது