கொச்சி: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில், பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 23ந்தேதி அறிவிக்கப்படும் என கூறி உள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாஸ்திரி அபயா (வயது 21) என்பவர் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கோட்டயத்தில் உள்ள பியஸ் 10வது கான்வென்ட்டில் தங்கியிருந்தார். இவர், கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, அங்குள்ள கிணற்றில் அபயா பிணமாக மிதந்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அபயா, பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொலை வழக்கை மாநில நிர்வாகம் சரிவர விசாரிக்கவில்லை என கூறி சிபிஐ விசாரணக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து, அபயா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்திரிக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, கொச்சியி்ல் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நடத்தப்பட்ட நார்கோ அனாலிசிஸ் சோதனையில், அபயா கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.‘
அபாய தங்கியிருந்தே அதே கான்வென்ட்டுடன் தொடர்புடைய சஞ்சு மாத்யூ என்பவர் கொடுத்த வாக்குமூலம் மற்றும் தடயவியல் விசாரணையில் அபயா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கு கடந்த 16 வருடங்களாக நடந்து வந்த நிலையில், அரசியல் செல்வாக்கு காரணமாக விசாரணை பல முறை முடக்கப்பட்டது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வந்தது. இந்த வழக்கை விசாரிக்க 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அலுவலகத்திலிருந்து தனக்கு நெருக்குதல்கள் வந்ததாக இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த முன்னாள் சிபிஐ டிஎஸ்பி வர்கீஸ் தாமஸ் பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். இதையெல்லாம் மீறிதான் கடநத 2008ம் ஆண்டு பாதிரியார்களும், அவருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளி தீர்ப்பளித்து உள்ளது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து, டிசம்பர் 23ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.
கன்னியாஸ்திரி பாலியல் கொலை வழக்கில், சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, பெரும் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.