திருவனந்தபுரம்: பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட இந்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகான நிலைமை, பிரதமர் மோடிக்கு சாதகமாக திரும்பியுள்ளது என்று கூறியுள்ளதன் மூலம், அந்த விஷயத்தை அரசியலாகப் பேசும் பா.ஜ. தலைவர்களின் வரிசையில் (எலைட் கிளப்), கேரள பாரதீய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் சேர்ந்துள்ளார்.

ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில், இவர், விமானப்படை தாக்குதல் சம்பவத்தோடு, சபரிமலை போராட்டங்களையும் சேர்த்துள்ளார். அவ்வளவே…

அவர் கூறியதாவது, “பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட விமானப்படை தாக்குதலின் மூலம் உருவான சூழல் மோடிக்கு சாதகமாய் மாறியுள்ளது. அதை நாங்கள் கெடுக்க விரும்பவில்லை. மேலும், கேரளாவைப் பொறுத்தவரை, சபரிமலை போராட்டங்களும் எங்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தியுள்ளன.

மேற்குவங்க மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் முதன்முறையாக புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. இதன்விளைவாக, அம்மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலில் ‘கோமா (CoMa)’ கூட்டணி ஏற்பட்டுள்ளது.

அங்கே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வால், இங்கே கேரளத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலில், நட்புரீதியான மோதல்தான் நடைபெறும்” என்றார்.

– மதுரை மாயாண்டி