திருவனந்தபுரம்

நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கெடுப்பில் 105 வயது முதியவர் அய்யப்ப பிள்ளை தனது வாக்கை அளித்தார்.

நேற்று மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் நடந்தது. இதில் கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கர் (7), கர்நாடகம் (14), மகராஷ்டிரா (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), நகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இந்த வாக்குப்பதிவில் கேரள மாநிலம் திருவனந்தபுர தொகுதியின் தைக்கட்டு பள்ளி வாக்குச் சாவடியில் கே அய்யப்ப பிள்ளை என்னும் 105 வயது முதியவர் வாக்களித்தார். இவர் 1934 ஆம் வருடம் மகாத்மா காந்தியின் ஆணைப்படி அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் சார்பில் 1940 ஆம் வருடம் முதல் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் சட்ட குழுவின் தலைவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தைக்கட்டு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை வாக்களிக்க இவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் இவர் தொடர்ந்து வாக்களித்து வருகிறார் என்பத் குறிப்பிடத்தக்கது.

இதைப் போல தொடர்ந்து வாக்களித்து வரும் கர்னாடகா சேர்ந்த கணபதி சாம்பு சாலுங்கே என்னும் ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளரும் வாக்களித்துள்ளார். இவருக்கு வயது 101 ஆகிறது. இவர் மைசூர், உத்தர கர்னாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பணி புரிந்து தற்போது ஓய்வில் இருந்து வருகின்றனர்.