டெல்லி:

ஆம்ஆத்மி அரசு ஆட்சி செய்து வரும் தலைநகர் டெல்லியில், மாதம் ஒன்றுக்கு 15ஜிபி டேட்டா வுடன் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். இது தலைநகர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

70தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2015ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார்.

அங்கு 2020ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதியுடன் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதையொட்டி, அங்கு மாநில மக்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஆம்ஆத்மி அரசு.  ஏற்கனவே பெண்களுக்கு மெட்ரோ ரயில், பேருந்துகளில் இலவச பயணம், மின்சார கட்டண சலுகை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பேராதரவு பெற்று வரும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, தற்போது,  டெல்லி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன்படி, ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 15 ஜிபி டேட்டாவுடன் இலவச வைஃபை திட்டத்தை இன்று அறிவித்து தலைநகர் மக்களை பரவசப்படுத்தி உள்ளார். இதற்காக டெல்லி முழுவதும் 16ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், முதல்கட்டமாக 1000 ஹாட் ஸ்பாட் டிசம்பர் 16ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அன்றுமுதல்  இலவச வைஃபை திட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவித்து உள்ளார்.

டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை, முக்கிய கட்சிகளான, பாஜக, காங்கிரசின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.