ருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.

 

இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.

தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.

இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது.

ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது.

மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே.

இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும்.


கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார்.

சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசிய முனிவர், நாரதர், வருணன், சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.

இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, “பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம் இயற்றுக” என்று கூறி மறைந்தார்.

அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.

கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர்.

பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர். பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர், பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபியாக மாறி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மகா உக்ரமூர்த்தியாக இருக்கும் நரசிம்ம பெருமாளைத் தணிக்கும் பொருட்டு சன்னதி முன்பாக ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டுள்ளது. இது நரசிம்மர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவபெருமானே சரபப் பறவையாக அவதாரம் எடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணித்தார் என்கிறது தல புராணம்.

கல்யாணத்தடை, கடன் தொல்லை, நீண்டநாள் Jநோய், நீதிமன்ற வழக்கு போன்ற வற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது.