சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய அரசின் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு சார்பில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
மதுரையின் பழமை, சங்க காலத் தமிழர்களின் நாகரிகம், வாழிடம் குறித்த அகழ்வாராய்ச்சிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்றன.
இதில் 102 அகழ்வாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இதுவரை 5,300 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள், வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோம் நாட்டின் உயர் ரக ரவுலட், அரிட்டைன் மண்பாண்ட ஓடுகள், யானை தந்தம் மூலம் தயாரிக்கப்பட்ட தாயக்கட்டைகள், சீப்பு, சுடுமண் முத்திரைகள், முத்து, பவள மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரைகள் ஆகிய தொல்லியல் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன.
மேலும் ஹரப்பாவைவிட சிறப்புடைய சுடுமண் கழிவுநீர் குழாய்களும் கிடைத்துள்ளன. நெசவுத் தொழிலில் பயன்படும் நூல் நூற்கும் கருவிகள், இயற்கைச் சாயமூட்டுவதற்கு உரிய பல கட்டிட அமைப்புகளும் கிடைத்துள்ளன. ஒரு தொழிற்கூடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்து உள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய தங்க மணிகளும் கிடைத்துள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சி பகுதிகளை மூடும் பணி ஏற்கெனவே நடந்தது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடக்க வேண்டும் எனறு பண்பாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் ஆனால் அவர்களது கருத்து புறக்கணிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் மூன்றவது கட்ட ஆய்வுப்பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. அவற்றில் பண்டைய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று காலை ஏழு மணி முதல் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மூடப்படுகின்றன.
அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியின் தென் பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று பண்பாட்டு ஆர்வலர்கள் கோரினர். இவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
“தமிழர் நாகரீகம் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ள இடத்தை மத்திய அரசு திட்டமிட்டே மூடுகிறது” என்று பண்பாட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.