கீழடி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். இதில் முதலில் நடந்த இரண்டு கட்ட அகழாய்வில் ஏராளமான சான்றுகள் கிடைத்ததையொட்டி இதுவரை 5 கட்ட அகழாய்வு நடந்துள்ளது. இங்கு சுமார் 2600 வருடங்களுக்கு முந்தைய பல பொருட்கள் கிடைத்தன.
குறிப்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை, ஓடு, உருவங்கள் பதித்த பானைகள், குழாய்க் கிணற்றின் வடிவம், கட்டிடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் இங்கு வாழ்ந்த தமிழர்கள் 2600 வருடங்களுக்கு முன்பே பல தொழில் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
இதையொட்டி தமிழக தொல்லியல்துறை ஆறாம்கட்ட அகழாய்வு நடத்த அனுமதி கோரியது. வெகு நாட்களாக அனுமதி அளிக்காமல் இருந்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. வரும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கீழடியில் இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கபட உள்ளது. இந்த பணிகளுக்குத் தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் இந்த அகழாய்வில் அரசுடன் பல்வேறு கல்வி நிலையங்களும் இணைய உள்ளன.