மும்பை: ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை” “ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்” என்றும், இந்தியாவின் 2024-25 உண்மையான GDP வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணித்துள்ளது என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசவ் வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது. இது 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி இரு மாத நாணய கொள்கை கூட்டமாகும். இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் மற்றும், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் ஆய்வு செய்து முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள். இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பார்.

அதன்படி, 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை சக்திகாந்தி தாஸ் வெளியிட்டார். நாணய கொள்கை குழுவில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் தற்போதைய 6.5 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் என தெரிவித்தார். உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருகிறது என்றும் கூறினார்.
ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன், வங்கி வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
மேலும், இந்தியாவின் பணவீக்கம் 4 வருட சரிவை எட்டியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தவர், சர்வதேச அளவில் பல பிரச்சனைக்கு மத்தியிலும், நாட்டின் பணவீக்கம் குறைந்து வருகிறது என கூறினார்.
மேலும், 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி அளவு 7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது என்றார். அதன்படி, முதல் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் இருந்த வர்த்தக நகர்வு மற்றும் டிமாண்ட் 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் என கூறியதுடன், உலகில் பல நாடுகளில் கடன் அளவு அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது, இது சர்வதேச நிதியியல் தளத்தைக் கட்டாயம் பாதிக்கும் என்றும் அச்சம் தெரிவித்தார்.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 616.73 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. கடந்த இரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 591 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது இந்த வாரம் 616.73 பில்லியன் டாலர் அளவீட்டை பதிவு செய்துள்ளது. இது கடந்த வாரத்திற்கு முன்பு கையிருப்பில் 2.79 பில்லியன் டாலர் குறைந்தது. இதன் விளைவாக ஜனவரி 19, 2024 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் $618.94 பில்லியன் டாலராக குறைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணப்பரிமாற்றத்தை உறுதி செய்ய கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]