சென்னை: இந்திய அணியின் நலன் கருதியே விஜய்ஹசாரே போட்டியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் நடராஜனும் நெட்பவுலாக இடம்பெற்றிருந்தார். அங்கு நடைபெற்ற டிவென்டி டிவென்டி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார். முதல் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோற்ற பின், அடுத்த போட்டியில் நடராஜன் களமிறக்கப்பட்டார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் அப்போட்டியை வென்றது இந்தியா. இதனால் டி20 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடராஜனின் பந்துவீச்சின் காரணமாக டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றிக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. கேப்டன் ரோகித் சர்மா நடராஜனின் கைகளில் வெற்றிக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார்.
அதைத்தொடர்ந்து தாய்நாடு திரும்பிய நடராஜன், அடுத்தடுத்து நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் இந்தியா இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் தொடங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி தொடருக்கான தமிழக அணியில் இடம் பெற்றார்.
ஆனால், இங்கிலாந்துடன் அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நடராஜனை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்த நிலையில், நடராஜன் விஜய்ஹசாரே போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய செயலாளர் ராமசாமி, விஜய் ஹசாரே டிராபி தொடரில் இருந்து நடராஜனை விடுவிக்கும்படி பி.சி.சி.ஐ., சார்பில் தமிழக கிரிக்கெட் சங்கத்திடம் (டி.என்.சி.ஏ.,) கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனால் நடராஜன் விடுக்கப்பட்டார், அவருக்கு பதிலாக ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க பி.சி.சி.ஐ., மற்றும் இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதனை ஏற்றுக் கொண்டு இவரை, விஜய் ஹசாரே டிராபியில் இருந்து விடுவித்துள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நடராஜன் பயிற்சிக்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.