நெட்டிசன்:

மா. மாரிராஜன் முகநூல் பதிவு

கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில், சுடு மண் குழாய்கள் வெளிப்பட்டன. இக்குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு நீர் செல்லும் குழாய்களாக (Under ground pipe line) இருந்தது..

மேற்கண்ட செய்தியை நன்கு நினைவில் இருத்தி, சங்கஇலக்கிய பரிபாடலில் வரும் ஒரு பாடலைப் பார்க்கிறோம்.

பரிபாடல்.. 20.
வைகை என்னும் தொகுப்பில் உள்ள பாடல்களின் சுருக்கம் இது..

மதுரை..
இது ஒரு மழைக் காலம்.

கடலில் படிந்த மேகங்கள் மேலெழும்பி சூல் கொண்டு மலைப்பாறைகள் சிதையுமாறு பெருமழையாக பெய்யத் தொடங்கியது.

தன்னோடு போர் புரிந்த புலியை தன் தந்தத்தால் குத்திக் கொன்ற யானையின் தந்தத்தின் மேல் படிந்திருந்த குருதிக்கறையை இம்மழை நீர் கழுவி சுத்தம் செய்தது.

மதுரை மக்கள் துயில் கொள்ளும் இரவு நேரத்தில் பெய்த இம்மழை நீர், புது வெள்ளமாய் வைகை ஆற்றில் கரைபுரண்டது.

இந்த நீரானது மதுரை நகரின் கோட்டைச் சுவர்களின் மீது மோதி பலத்த ஒலியை எழுப்பியது.

சத்தம் கேட்ட விழித்த மக்கள் புது வெள்ளத்தைப் பார்க்க வைகைக்கு விரைகின்றனர். நாமே முந்திச் சென்று பார்க்க வேண்டும் என அனைவருக்கும் ஆர்வம். அவசரம்.
தூக்க மயக்கம் வேறு.

தேரில் பூட்டவேண்டிய குதிரைகளை வண்டியிலும், வண்டி எருதுகளை தேரிலும் பூட்டினர். குதிரைக்குப் போடவேண்டிய சேணத்தை யானைக்கு இட்டனர். ஒரு சிலரோ எதுவும் போடாமல் யானை குதிரை மீது அமர்ந்து சென்றனர்.
( நாம இன்று சைக்கிள் பைக் கார் வைத்திருப்பது போல்.. அவர்களுக்கு தேர், வண்டி, குதிரை )

ஆண்கள் அணியும் ஆபரணங்களை பெண்களும், பெண்களின் முத்துமாலைகளை ஆண்களும் அவசரத்தில் அணிந்து விரைந்து சென்றனர்.

வைகையின் இருகரைகளும் புது நீரால் பொங்கி வழிந்தது. அதைப்பார்த்து களிப்புறும் மதுரை மக்கள்.

கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்ற மகளிர் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களைக் கண்டு சிலிர்த்தனர்.
( இந்தப் பிரச்சனை இப்போதும் இருக்கோ)

தோழி ஒருவர் ஒரு பரத்தையின் கழுத்தில் இருக்கும் நகையைக் கண்டு அதிர்வுற்றார்.

ஆகா.. இது தன் தலைவியின் நகைதானே. பரத்தையிடம் எப்படி.?
பிரச்சனை ஆரம்பம். ( இது தனி பஞ்சாயத்து. நமக்கு வேண்டாம்)

இவ்வாறான வைகையில் பெருக்கெடுத்த புது நீர்,

காடுகள், கழணிகள் வழியே பாய்ந்து சென்று ஊருக்குள் கடந்து சென்றது..

எப்படி சென்றது..

பாடல் 20..
104 – 107. வரிகள்.

நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது

இப்பாடலில் வரும் சுருங்கை என்பதுதான் தற்போதைய கீழடியில் கிடைத்துள்ளது. நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் நீர் குழாய்க்கு சுருங்கை என்று பொருள்.. அதாவது Underground pipe line..

பாடலின் பொருள்…

இவ்வாறான வைகை நீர் பெரிய மாளிகைகள் உடைய மதுரை நகரின் (நீள்மாடக்கூடல்) நிலத்தடியில் புதைக்கப்பட்ட நீண்ட குழாய்கள் வழி ஓடியது. ( நெடுமால் சுருங்கை நெடு வழிப் போந்து) .
மதில்களின் கீழ் அமைந்த வெளியேறும் குழாய் ( சுருங்கை) வழியாக வெளியேறியது. இது சினம் கொண்ட யானை ஒன்று தன் தும்பிக்கைத் தூக்கி நீரை பீய்ச்சி அடிப்பதுபோல் இருக்கிறது..

ஆக..

2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தெருக்களில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட குழாய்கள் இருந்தது. மழை நீரோ, கழிவு நீரோ இக்குழாய்களின் வழியே ஓடி வெளியேறியது.

பரிபாடலில் கூறப்பட்ட இக்குழாயின் வடிவம்தான் தற்போது கீழடியில் வெளிப்பட்டது.

சற்றும் தயக்கமில்லாமல் சொல்வோம்…

” தமிழன்டா ”

அன்புடன்
மா. மாரிராஜன்.

நன்றி..
ஐயா.திரு. பாலகிருஷ்ணன்.. இ.ஆ.ப.

பழந்தமிழர் தொழில் நுட்ப அறிவியல்.
இணையப்பக்கம்…

புகைப்படம்.
திரு.ஆறகளூர் வெங்கடேசன்..