கீழடி: சிவகங்ககை மாவட்டம் கீழடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 9வது கட்ட அகழ்வாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி மற்றும் பழங்கால எடைக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கட்டமாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழரின் தொண்மையான வரலாறு குறித்த பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். 7ம் கட்ட அகழாய்வு பணியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வுகளின்போது, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து, 8ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஆண்டு தொடங்கி, செப்டம்பர் வரை பணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வின்போது, 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.
கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது.
இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
. கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பளபளப்பான மேற்பரப்புடன் கூடிய எடை கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகளும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், : கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 175 செ.மீ. ஆழத்தில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியிலிருந்து படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவ்வெடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, பளபளப்பான மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது.
இக்கல் 2 செ.மீ.விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எனட கொண்டுள்ளது. இந்த எனடக்கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கீழடியில் நடைபெற்ற 5-ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட அகழாய்வு குழி அருகே இரும்பு உலை அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அகழாய்வு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அதன் கீழ் பகுதி தட்டையாக இருந்தது. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டிருந்தன.
கீழடி அகழாய்வு பகுதி முன்பு தொழில் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருட்களில் இருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள், எடைகற்கள் ஆகியவை, அங்கு ஏற்கனவே தொழில்கள் நடந்ததை உறுதிபடுத்தும் ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில், தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.