“எனது நிழல் கூட மேலே படக்கூடாது என்று யாரோ சொல்லியதன் காரணமாக தன்னை சந்திப்பதை தவிர்த்து வரும் சந்திரசேகர் ராவ் என்னை கண்டாலே 50 அடி தூரம் தள்ளியே நிற்கிறார் அந்தளவிற்கு மூடநம்பிக்கைக்கு அடிமையாகிப்போனவர்” என்று தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியிருந்தார்.
சந்திரசேகர் ராவ் மூடநம்பிக்கையில் ஊறித்திளைத்தவர் என்று பிரதமர் மோடி கூறுவது இது முதல்முறையல்ல தவிர தெலுங்கானா மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விஷயமாகவே அது உள்ளது.
2014ம் ஆண்டு முதல்முறையாக தெலுங்கானா மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர் ராவ் ஆறு ஆண்டுகள் தலைமைச் செயலகம் செல்லாமலேயே தவிர்த்து வந்துள்ளார்.

ஆறாம் நிஜாம் மன்னர் வீர் மஹபூப் அலி கான் பகதூர் என்பவரால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநில தலைமைச் செயலகமும் மற்றொரு பகுதியில் ஆந்திர மாநில தலைமைச் செயலகமும் செயல்பட்டு வந்தது.
நிஜாம் மஹபூப் அலி-யின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சிலர் 1888ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குள் மன்னர் நுழையும் போது உடும்புகளை அவர் எதிரே போகச் செய்து இந்த கட்டிடம் ராசியானது இல்லை என்ற வதந்தியை பரப்பினர்.
அதுமுதல் மூடியே இருந்த இந்த கட்டிடம் 1940 ம் ஆண்டு நிஜாம் ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலகமாக பயன்படுத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் நிஜாம் ஆட்சி சரணாகதி அடைந்ததைத் தொடர்ந்து இது ராசியில்லா கட்டிடம் என்ற பேச்சும் அதற்கு ஷைபாபாத் சாபமும் தான் காரணம் என்ற கதைகளும் உலவ ஆரம்பித்தது.
இதையே காரணமாக வைத்துக் கொண்டு தனது வீட்டின் ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கட்டிடம் எழுப்பி அதை முகாம் தலைமைச் செயலகமாக பயன்படுத்தி வந்தார் சந்திரசேகர் ராவ்.
இந்த கட்டிடத்திற்கான செலவை தனது சொந்த செலவாக காட்டிய ராவ் அதற்காக தனியாரிடம் இருந்து நிதி பங்களிப்பையும் பெற்றார் என்று கூறப்படுகிறது.
பின்னர் புதிதாக தலைமைச் செயலகம் கட்டிய பின் ஆறு ஆண்டுகள் கழித்தே தெலுங்கானா மாநிலத்தின் உத்தியோகபூர்வ தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தார் சந்திரசேகர் ராவ்.
ஆறு என்ற எண் தனக்கு ராசியானது என்று ஏற்றுக்கொண்ட சந்திரசேகர் ராவ் தனது பதவி ஏற்பு நேரம் முதல் அரசு கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை வரை அனைத்தும் ஆறு வரும் வகையிலேயே அமைத்திருந்தார்.
கட்டிடத்தில் வாஸ்து தொடங்கி பதவியேற்பு நேரம் வரை அனைத்திலும் ஜோசியம், நியூமராலஜி, வாஸ்து என முழுநேரமும் மூடநம்பிக்கையில் ஊறிப்போனதால் அவரது நிர்வாகத்திறன் தெலுங்கானா மக்களிடையே பெரிதும் எடுபடவில்லை.
பாஜக-வின் பி-டீம் என்று பி.ஆர்.எஸ். கட்சிமீது விழுந்த நிழலை மறைக்க தேர்தலின் போது அதனுடன் கூட்டணி அமைக்காமல் தள்ளியிருந்த போதும் மக்களின் ஆதரவு இம்முறை சந்திரசேகர் ராவுக்கு இல்லாமலே போனது குறிப்பிடத்தக்கது.