சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும், குழந்தைகளின்  எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உயர்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் மேலும் 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்த மசோதா கொண்டு வந்து பேசினார். இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளித்து, மசோதாவை நிறைவேற்றியது.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறிdர்.

முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும்,  ‘மாபெரும் தமிழ் கனவு’ நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். பொன்னியின் செல்வன், வைக்கம் போராட்டம் நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என கூறினார்.

மேலும், குழந்தைகளின்  எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டு தோறும் 3 சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர் அவர்களுக்கு  ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என்றார்.

தமிழ் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச சிரமப்படுவதை கருத்தில் கொண்டு ஸ்போக்கன் இங்கிலிஷ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை, பள்ளி முடிந்த பிறகு 6,7,8 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும், 9,10,11,12 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பொதுவான கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடத்தப்படும்.

பள்ளிக்கு வந்து படிக்க முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று கல்வி மற்றும் இயன்முறை சிகிச்சை அளிக்க புது திட்டம் உருவாக்கப்படும்.

2021-22 கல்வி ஆண்டில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித்தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு ஆகிய தளங்களில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

தமிழ் நூல்கள் மொழி பெயர்ப்பு திசைதோறும் திராவிடம் என்ற பெயரில் சிறந்த தமிழ் நூல்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்த்திடவும், கடினமான சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ஊக்கப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசால் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் புகார்களை பெற கட்டணமில்லா தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்படும்.

இதனிடையே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும்

நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இவ்வாறு அன்பில் மகேஷ்  கூறினார்.