முனை  நதியில் படகு செலுத்தும் சத்யவதியைப் பார்த்த சந்தனு – கண்களால் அவளை வேட்டையாடினான்.  மிருக வேட்டைக்கு  வந்தவன், கன்னி வேட்டையில் ஈடுபட்டான்.
ஆறடியைத் தொட்டுவிடும் உயரத்தில் இருந்த அவள் காலடியில் தன் செல்வம் அத்தனையும் கொட்டிவிடத் தயாராகிவிட்டான்.   நிரந்தரமாய்  ஒரு மோகனப் புன்னகை உறைந்து கிடக்கும் அவள் உதட்டைப் பிடித்து நிமிண்ட அவள் விரல்கள் பரபரத்தன.  கெண்டை மீன்போல புரளும் அவள் கண்களின் கவனத்தை ஈர்க்க அவன் மேற்கொண்ட முயற்சிகள் அத்தனையும் தோற்றன.  அவளுடைய வளைந்த புருவமும், வாளிப்பான தோள்களும், கூந்தலை அள்ளிமுடித்த கோலமும் – அதில் செருகப்பட்டிருந்த மரிக்கொழுந்தும் அவனுக்குள் நெருப்பைப் பற்ற வைத்தன.
gavanikka-padadha-kaavoya-pookkal
மதுக்  கிண்ணத்தில் விழுந்த புழுவாய் நெளிந்தான். ‘அவள் கையில் கர்வத்தோடு இருக்கும் துடுப்பாக நான் பிறந்திருக்கக் கூடாதா?” என்று தன் குதிரைக்குக் கேட்கும் குரலில் பிதற்றினான்.  அது சற்று பெரியதாகக் கனைத்தது.  அப்போதும் அந்தப் பைங்கிளி பார்வையை இவன் பக்கம் திருப்பவில்லை.
கங்காதேவியைவிட அழகுதான் இவள், இதில் சந்தேகமே இல்லை.  கங்காதேவி அழகின் இமயம் என்றால், சத்தியவதி அதன் சிகரம் என்று நினைத்தான்.
ஒரு செம்படவப் பெண்ணிடம் இத்தனை பேரழகா? இது கனவோ என்று ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான், வலித்தது.
நிஜம்தான் சத்யவதி ஓடுகிற நதிக்கு எதிராகப் படகு செலுத்துகிறாள்.  அவளுடைய பூரித்த அழகு திமிறியது. அதன் சுமையை சுமக்க முடியாமல் சுமக்கும் அவளுடைய சிற்றிடை ஒடிந்து விடக்கூடாதே என்று எதற்கும் அஞ்சாத சந்தனு இதற்கு பயப்பட்டான்.
அந்தச் சந்தனச்சிலை, மாமன்னன் ஒருவன் தன் அழகுக்கு அடிமையாகிவிட்டதை அறியாமல், வீணையை மீட்டியது போன்ற குரலில் ஏதோ ஒரு பாடலை இசைத்தவாறே வானத்தில் பறக்கும் அன்னப் பறவையை ரசிக்கிறது.
இந்த இழுப்பு வெள்ளத்துக்கு எதிர்த்துடுப்பு போடும் அளவுக்கு வலிமை இந்தச் செண்பகப் பூவைவிட மெல்லிய உடம்புக்குள் எப்படி?
சந்தனுவுக்குள் சத்தியவதி ஆச்சரியக்குறியைப் போட்டு கொண்டே இருந்தாள்.  சந்தனுக்கு இது ஒன்றும் முதல் காதல் அனுபவமில்லை.  ஏற்கனவே கங்கையைக் காதலித்து மணந்து – தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.
கங்கைக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறி விட்டதால் கங்கா தேவி அவனைவிட்டுப் பிரிந்துவிட்டாள்.  இப்போது சந்தனு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
நதிக்கரையில் அறையப்பட்டிருந்த முளையில் பரிசிலை இழுத்துக் கட்டிய சத்தியவதி, தரையில் குதித்தாள்.  சந்தனு தூண்டிலில் அகப்பட்ட மீனாகத் துடித்தான்.  சத்தியவதி தன் குடிசையை நோக்கி நடக்கிறாள்.  சந்தனு ஓடிச் சென்று அவளை மறித்தான்.
“பெண்ணே!” என்றான்.
“சொல்லுங்கள், பரிசல் ஓட்டிவர வேண்டுமா?” என்று கேட்டவள் கோபமாய் முறைத்தாள்.  சந்தனுவின் கண்கள் சத்யவதியின் மார்பில் நிலைத்திருந்ததுதான் காரணம்.
காற்றில் விலகிப் போயிருந்த மாராப்பை சரிசெய்து விட்டு, ‘எத்தனை வயதானால் என்ன ஆண் புத்தி பெண்களின் கழுத்துக்குக் கீழேதான்’ என்று தனக்கு மட்டும் கேட்கும்படிச் சொல்லிக் கொண்டாள்.  சந்தனு சிலையாய் சமைந்து நின்றான்.  அவன் கால்கள் தான் பூமியில் இருந்தது.  அவன் வேறு லோகத்தில் சஞ்சரித்தான்.
சந்தனுவின் கனவுலோகத்தில் சத்தியவதியின் இடையை தன் இடது கையால் தழுவி தன்னோடு இழுத்து அணைத்தபடி, முகத்தை அவள் உதட்டுக்கு அருகே கொண்டு போய்….
சத்யவதி ‘அம்மா’ என்கிறாள்.  சந்தனு ‘திக்திக்கிறதா?’ என்று கேட்டான்.  இதை வாய்விட்டே சொன்னான்.  சத்தியவதிக்கு கேட்டது.  என்ன நடந்திருக்கும் என்று அவளுக்குப்  புரியாமலில்லை.
சத்தியவதி அவனையே பார்த்தாள்.  அவன் புஜபராக்ரமம் சந்தேகமில்லாமல் பெரிய வீரன் என்பதைப் பறை சாற்றியது.  பல போர்க்களங்களை அவன் சந்தித்திருக்க வேண்டும்.  இரவு வானத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரம் போல் அவன் மார்பில் விழுப்புண்கள் பரவிக் கிடந்தன.  சின்னதாய் தொப்பை போட்டுவிட்ட வயிறும் அவனுக்குக் கம்பீரத்தைக் கூட்டவே செய்தன.
‘ஏன் என் மனம் யாரோ ஒருவன் மேல் ஈடுபடுகிறது?’ மனசுக்குள் கேள்வி கேட்டாள், பதில்தான் கிடைக்கவில்லை.
“பெண்ணே! என் உயிரை என்னிடத்தில் இருந்து பறித்துவிடாதே!” என்றான் கெஞ்சியபடியே.
சத்தியவதிக்கு சிரிப்புதான் வந்தது. பார்க்க மன்னவன் போல் தோற்றம்.  சரியான பைத்தியமாக இருப்பான் போலிருக்கிறதே.
gavanikka-padadha-kaavoya-pookkal-copy
“இப்படித் தனியே நடக்கும் பெண்ணிடம் வம்பு செய்தால் என் தந்தையின் தண்டனைக்குத் தப்ப முடியாது என் தந்தைக்கு தப்பினாலும் மாமன்னர் சந்தனு தண்டிக்கவே செய்வார்”என்றாள்.
” உன் மாமன்னரை இதற்கு முன் பார்த்ததில்லையா?” என்று கேட்டான் சந்தனு.
மன்னன் மேல் இத்தனை மரியாதை வைத்திருக்கும் பெண் நிச்சயம் தன் காதலை மறுக்க மாட்டாள் என்றே நினைத்தான்.
ஆனாலும் அவனுக்குள் ஒரு சந்தேகம்.  இத்தனை அழகான தேவதையை இளைஞர்கள் இன்னும் காதலிக்காமல் விட்டு வைத்திருக்கவா போகிறார்கள் என்று.
சத்தியவதிக்கு ஏற்கெனவே ஒரு காதலன் உண்டு.  அவனைக் கணவன் என்றே குறிப்பிட வேண்டும்.  இல்லையென்றால் சத்தியவதிக்கு பிறந்த வியாசனின் தந்தை என்றும் குறிப்பிடலாம் பராசர முனிவர்தான் அவர்.
ஒரு நாள் யமுனை நதியைக் கடப்பதற்காக சத்தியவதியின் உதவியை நாடினார்.  அக்கரைக்குப் போவதற்குள்ளாகவே பராசர முனிவருக்கு சத்தியவதி மேல் காதல் ஏற்பட்து.  அப்போது சத்தியவதிக்குப் பெயர் மச்சகந்தி.  உடம்பில் மீன் வாடை அடித்தது.  இந்த நாற்றம் மட்டும் இல்லை என்றால் சத்தியவதி அரண்மனையில் இளவரசியாய் வலம் வந்து கொண்டிருப்பாள்.
இவள், சேதி நாட்டு அரசன் உபரிசரவசுவுக்கும், அப்சரசாக இருந்து பிரம்மனின் சாபத்தால் மீனவ குப்பத்தில் பிறந்த அத்ரிகைக்கும் பிறந்த மகள், சத்தியவதியைப் பெற்றதுமே சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்குப் போய்விட்டாள் அத்ரிகை.
முகம் சுழிக்க வைக்கும் வாடையோடு பிறந்த சத்தியவதியை தந்தை வசுவும் திரும்பிப் பார்க்கவில்லை.  யமுனைக் கரையில் அநாதையாகக் கிடந்த அந்தத் தங்க நிலவை செம்படவத் தலைவன் தாஸன் எடுத்து வளர்த்தான்.
பருவ வயதில் தந்தைக்கு துணையாக படகு ஓட்டிக் கொண்டிருந்தாள்.  பார்த்த பராசருக்கு காதல் வந்துவிட்டது.  “உங்கள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் எனக்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும்… ” என்று பராசர முனிவரிடம் கேட்டாள்.  காதல் பித்தனாகி இருந்த பராசர முனிவரும் அதற்கு உடன்பட்டு – சத்தியவதியோடு கூடினார்.
ரிஷிகர்ப்பம் ராத்தங்காது.  அந்தக் கணமே வியாசனைப் பெற்றாள் சத்தியவதி.  பிறந்ததுமே வியாசர் ஏழு வயது பாலகனாக வளர்ந்தார்.  சடைமுடியும், திருத்தண்டமும், கமண்டலமுமாக நின்றார்.  தவம் செய்யப் புறப்பட்டார்.
மச்சகந்தி இப்போது பரிமளகந்தியாகி விட்டாள்.  அவள் மீதிருந்த துர்வாடை பெற்ற மகனான வியாசனுக்கு போய்விட்டது.  இப்போது அவள் மீது மீன் வீச்சமில்லை.  சுகந்தமணம் வீசும் சத்தியவதி முனிவன் அருளால் மறுபடியும் கன்னியானாள்.
சந்தனு சந்தித்து பரிமளகந்தியைத்தான்!
சத்தியவதிக்கு தன் எதிரில் நிற்கும் அழகன் ஒரு வேளை மன்னன் சந்தனுவாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படவே செய்தது.  நம் மன்னர் பெண் பின்னால் பிதற்றிக் கொண்டு வரக்கூடியவர் இல்லை என்று தன் எண்ணத்துக்குப் பதில் சொல்லிக் கொண்டாள்.
அதற்குள் சத்தியவதியின் வளர்ப்புத் தந்தை தாஸன் அங்கு வந்தான்.  அவன் சந்தனுவைப் பார்த்ததும் “மாமன்னருக்கு என் வணக்கங்கள்!” என்று பணிந்தான்.
சத்தியவதிக்கு வியப்பால் விழி விரிந்தது.  மாமன்னரைக் கிறங்கடித்த தன் அழகின் மீது ஒரு கர்வம் ஏற்பட்டது.  அவள் மனதில் பாத்தி கட்டிய உணர்வு தவிப்பா, சந்தோஷமா என்று தெளிவாகத் தெரியவில்லை.
“தாஸரே, உம்முடைய மகள் சத்தியவதியை என் ராணியாக்க விரும்புகிறேன்” என்றான் சந்தனு.
“உங்களைக் கணவராய் அடைய சத்தியவதி புண்ணியம் செய்திருக்க வேண்டும், மன்னவரே, இது நான் பெற்ற பாக்கியம்!” என்றான்.
உணர்ச்சிப் பெருக்கில் அவனுக்கு பேச்சு தடுமாறி வந்தது.  கண்களில் கண்ணீர் பெருகியது.
மன்னன் சந்தனுவுக்கு ஏற்கனவே மணமாகி தேவவிரதன் என்ற மகன் இருப்பது சத்யவதிக்குத் தெரியும்.  மன்னனுக்கும் தனக்கும் திருமணம் நடந்தால் பட்டத்தரசி பட்டம் கிடைக்கும். தனக்குப் பிறக்கும் பிள்ளைக்கு மன்னனாகும் உரிமை மறுக்கப்பட்டு விடுமே?
சத்தியவதி தந்தையைத் தனியே அழைத்தாள், “என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே அரசனாகும் உரிமையை மன்னன் தருவாரென்றால், நான் திருமணத்துக்கு  இசைகிறேன்.  முடியாது, முதல் மனைவியின் மகன் தேவவிரதன்தான் பட்டத்தரசன் ஆவான் என்றால் என்னை மறந்துவிடச் சொல்லுங்கள்” என்றாள்.
தந்தை தாஸன் மகளை பொருள் புரியப் பார்த்தான்.

ஓவியம்: ஜமால்
ஓவியம்: ஜமால்

காதல் வேகத்தில் இருந்த சந்தனு சத்தியவதியின் கோரிக்கைக்கு உடன்பட்டான்.  தேவவிரதனும் அரச பதவியைக் கோர மாட்டேன் என்று சத்தியவதிக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.  திருமணம் நடந்தது.  அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ர வீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.
காலம் ஓடியது.
மூத்த மகன் சித்ராங்கதன் போரிலே மாண்டான். இளையவன் விசித்ர வீரியன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரு பெண்டிரை மணந்தான்.  அவனுக்கு காச நோய்.  மனைவியோடு கூடி இன்பம் தர இயலாதவனாக இருந்தபடியால் தன் கணவரின் முதல் மனைவியின் மகன் தேவிரதனிடம் (பீஷ்மர்), “நீ உன் தம்பி மனைவியரைக் கூடி வாரிசு உருவாக்க வேண்டும்” என்று வேண்டினாள் சத்தியவதி.
பீஷ்மர் ஏற்கெனவே தான் செய்து கொடுத்த பிரம்மச்சர்ய சத்தியத்தைக் காக்கும் பொருட்டு மறுத்துவிட்டார்.  அப்போது சத்தியவதிக்கு பராசர முனிவருக்குப் பிறந்த வியாசன் ஞாபகத்துக்கு வந்தான்.
தாய் தன்னைத் தேடுவதை தவத்தில் ஈடுபட்டிருந்த வியாசன் அறிந்தான்.  கமண்டலத்தையும் மறக்காமல் தூக்கிக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தான்.
சத்தியவதி வியாசனை அழைத்து வாரிசை உருவாக்கித் தரும்படி வேண்டினாள்.  அந்தக் காலத்தில் தம்பிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்றால் அண்ணனை வைத்து வம்ச விருத்தி செய்வது வழக்கமாய் இருந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில், தன் மாமியாரின் முதல் மகனை எதிர்பார்த்து கனவுகளைச் சுமந்தபடி இருந்தாள் அம்பிகை.  வியாச முனிவரைப் பார்த்தும் அவள் ஆசையில் இடி விழுந்தது. துர்நாற்றமும், அருவருப்பான தோற்றமும் கொண்ட வியாசனைப் பார்க்கப் பிடிக்காத அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள்
வியாசன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றினான்.  அம்பிகை சம்போகத்தின் போது கண்களை மூடிக் கொண்டதால் பிறந்த மகன் திருதராஷ்டிரன் குருடாகிப் போனான்.
முடமானவனும், குருடனும் அரசனாகத் தகுதியவற்றவன் என்று நீதிநூல் கூறுகிறது. யோசித்தாள் சத்யவதி.
தன் இரண்டாவது மருமகளை வாரிசு பெற்றுத் தரத் தயார் படுத்தினாள்.  அவள் அம்பாலிகை.  வியாசனைப் பார்த்தவள்.  அந்தக் கோர உருவத்தைப் பார்த்து பயந்து போனாள்.  உடம்பு வெளிறியது.  கிடுகிடுவென நடுங்கியது.  ஆகவே அம்பலிகைக்குப் பிறந்த மகன் பாண்டு பயந்த சுபாவம் கொண்டவனாகவும், உடல் எல்லாம் வெளிறியவனாகவும் இருந்தான்.
இப்படி பயந்த சுபாவம் உள்ளவனைக் கொண்டு அரசைப் பரிபாலிப்பது ஆகாத காரியம் என்று நினைத்த சத்யவதி அம்பாலிகைக்கு நிறைய புத்தி சொல்லி-அவள் மனதிலிருந்த பயத்தை ஓட்டி – மறுபடியும் வியாசனோடு கூடுவதற்குத் தயார்படுத்தினாள்.
இன்னொருமுறை வியாசனோடு கூடுவதை நினைத்தாலே அம்பாலிகைக்கு குடலைப் புரட்டியது.  தன் சேடி சுபாவை அழைத்து – தன்னைப் போல் அவளை அலங்கரித்து வியாசனிடம் அனுப்பி வைத்தாள்.  அவளுக்கு விதுரன் பிறந்தான்.
விதுரன் நல்ல திகாத்திரமானவனாக, கல்வி, கேள்விகளில் சிறந்து – ஞான சீலனாகத் திகழ்ந்தான்.  அரசனாவதற்கான அத்தனை தகுதிகளையும் விதுரன் பெற்றிருந்தான்.  ஆனால்…
சத்தியவதிக்குத்தான் விதுரனை அரசனாக்க விருப்பமில்லை.  விதுரனைச் சுமந்தது அடிமையின் வயிறு என்ற ஒரே காரணத்துக்காக – பயந்தவன் என்றாலும் பாதகமில்லை என்று பாண்டுவை மன்னன் ஆக்கினான்.
பரத வம்சத்தைப் பின்னால் இருந்து இயக்கியவள் சத்யவதிதான்.  அவள் மட்டும் தாதியின் மகன் விதுரனை அரசனாக்கியிருந்தால் சந்த்னுவை மிஞ்சிய அரசாட்சி தந்திருப்பான்.  அரசுக்குள் துரியோதனின் தலையீடு இருந்திருக்காது.  இந்தப் பாரதப் போரே ஏற்பட்டிருக்காது.
பாரதப் போருக்குக் காரணம் – பாஞ்சாலி துரியோதனனைப் பார்த்துச் சிரித்தது. இடையில் வந்த காரணம்.  ஆரம்பத்திலிருந்தே அத்தனைக்கும் சூத்ரதாரியாக இருந்தவள் சத்தியவதிதான்!