அத்தியாயம் – 20 முகுந்தை
அவன் தாயைக் தேடி வேகமாய் வருகிறான். இன்னதென பிரித்தறிய முடியாத பலவகை பாவங்களும் முகத்தில் படிந்து கிடக்கின்றன. கர்வம் மிகுந்த கண்களில் சந்தேகச் சாயலைக் காண முடிகிறது.
அத்ரி முனிவர் அடித்துச் சொன்னாரே, ‘நீ தந்தை என்று வாய்நிறையக் கூப்பிடும் கவிமுனி உனக்குத் தந்தையல்ல. கவுண்டிண்ய புரத்து மன்னன் ருக்மாங்கதனுக்குப் பிறந்தவன் நீ என்று.
ஒருவேளை இது உண்மையாக இருந்து விடுமோ.. அந்தக் கூட்டத்தில் தந்தை கவிமுனியும் இருந்தாரே. அவரையும் பார்க்கத்தானே செய்தான். மற்ற முனிவர்கள்தான் சிறிது சலசலத்தனர். அவர் முகம் அன்றலர்ந்த மலர் போல் எத்தனை பளீரென்று இருந்தது. சிறிது கூட சலனம் இல்லையே.
‘அடுத்தவன் ஆயிரம் சொல்வான். ஆள்கின்ற புருஷனுக்குத் தெரியும் மனைவியின் கற்பு’ என்ற கர்வத்தில் அல்லவா இருந்தார். புருஷனே மனைவியைச் சந்தேகப்படாதபோது பெற்ற பிள்ளைக்கு என்ன வந்தது?
இல்லை. இதன் பெயர் சந்தேகம் இல்லை. உண்மையை அறிந்து கொள்ளத்துடிக்கும் உத்வேகம். வேகமாய் அவனை நடக்கச் செய்வதும் அதுதான்.
அங்கிருந்து புறப்படும்போதே சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறான்.”பெற்றவளிடம் நான் யார் மகன் என்ற உண்மையைத் தெரிந்து விட்டு வருகிறேன். அத்ரி முனிவரே போய்விடாதீரும். நானோ நீரா.. இருவரில் யார் ஞானி என்று பார்த்து விடுவோம்.”
“பேஷா என்றார் அந்த ஞானி. வளர்ந்து நீண்ட தாடியைத் தடவி விட்டுக் கொண்டார். உதட்டில் ஓர் எளனப் புன்னகை உருவாகி கவிமுனியை நோக்கிப் போனது.
‘உண்மை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அத்ரிமுனி அப்படிப் பேசியது முறையல்ல. என்று குரல் கொடுக்க யாருமே இல்லாமல் போய்விட்டார்களே. தாடி நரைத்த கிழவரை சிறுவன் வெல்வது யாருக்குத்தான் பிடிக்கும்?
கிருச்சமதர் உண்மையிலேயே கவிமுனியின் மகன் இல்லையென்றால் ‘யார் பெரியவன்’ என்று முடிவு செய்ய முனிவர்களுக்கு இடையில் நடந்த சொற்போரில் இவனுக்கு ஆரம்பத்திலேயே அனுமதி மறுத்திருக்கலாமே!
ஆறு வயது நிரம்பிய சிறுவன்தானே? இவன் என்ன புரட்டிவிடப் போகிறான் என்று எண்ணி யிருக்கலாம்.
போட்டியென்று வந்தபிறகு இறுதிவரை பார்த்து விடுவதுதானே முறை. தோற்றுப் போய்விடு வோம் என்று பயம் வந்ததும் ‘முனிவர்களுக்கிடையில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உனக்கு அருகதை இல்லை. நீ பிறப்பால் இழிந்தவன். உன் தந்தை முனியல்ல. அசுரன். அசுரர்களோடு முனிவர்கள் மோதுவது பாபம் என்று வேதம் சொல்கிறது என்று வேதத்துக்குப் பின்னால் ஒளிவதை எதில் சேர்ப்பது?
‘என்னோடு போட்டிப் போட வருவதற்கு முன் இந்த ஞானம் எங்கே போயிற்று?” என்ற சாதாரணக் கேள்வியைக் கூட கேட்க முடியாத நிலையில் கிருச்சமதர் இருந்தான்.
அவன் முன் வைக்கப்பட்டிருப்பது தாயின் கற்பல்லவா? போட்டியில் வெற்றி பெறுவதைவிட கற்பைக் காப்பாற்றுவதுதானே பிள்ளையின் தலையாயக் கடன். அந்தக் கடனைத் தீர்க்கத்தான் தாயைத் தேடி வேகமாய் வருகிறான்.
மகதநாட்டு மன்னன் சூரனின் தந்தைக்கு நாளை திவசம். அதற்குப் போன இடத்தில்தான் இவன் தந்தை யார் என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. கவிமுனிக்கு ‘நான் தான் உன் தந்தை’ இதற்காக அம்மாவைத் தேடிப் போக வேண்டியதில்லை’ என்று தடுப்பதற்கு என்ன? எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலல்லவா நடந்துக் கொண்டார். ஏன்?
வேகவேகமாய் வந்ததில் மூச்சிரைக்கிறது சிருச்சமதர்க்கு. ஆஸ்ரமத்திற்கு வெளியே நின்று ‘அம்மா’ என்கிறான். குரலில்தான் எத்தனை சூடு!
ஓடிவந்து தோள் பற்றித் தொங்கி விளையாடிச் சோர்ந்து – மடியில் தலைவைத்துத் தூங்க அடம் பிடிக்கும் பிள்ளைக்கு என்ன ஆயிற்று? மகதநாட்டில் திவசகிரியை முடித்து வர நாளாகும் என்றுதானே தந்தையும் மகனுமாய் போனார்கள்.
மகனின் அழைப்பைக் கேட்டு வெளியே வருகிறாள் முகந்தை. இந்தப் பூரண நிலவின் கற்பைத்தான் அத்ரிமுனிவர் எல்லோர் நடுவிலும் கழுவேற்றினார்.
“வா கிருச்சமதர்.”
“உடனே போக வேண்டும் . என் தந்தை யார்? கவி முனிவரா? மன்னன் ருக்மாங்கதனா?” அம்பெனப் பாய்கிறது கேள்வி. கற்பைக் குறிவைத்து.
கோபக்கனல் கண்களில் தெறிக்க நிற்கும் பிள்ளையைப் பார்க்கிறாள். ஆறுவயதில் வேதம் அனைத்தையும் அறிந்துக் கொண்ட ஞானப் பிள்ளை. ஆனாலும் விரகதாபதத்தைப் பற்றி என்ன தெரியப் போகிறது? தந்தை யார் என்று கேட்கிறான். தந்தையின் பணி பிள்ளையின் பெயருக்கு முன்னால் முகவரி சொல்லி நிற்பது மட்டுமா? தாய்க்குச் செய்ய வேண்டிய கிரியைகள் நிறைய உள்ளனவே. அவைகளைப் பட்டியலா போட முடியும்?
“என் தந்தை யார்? மன்னன் ருக்மாங்கதனா? முனிவர் கவியா?”
“முக்காலமும் உணர்ந்த உன் தந்தையிடம் கேட்டால் அவர் சொல்லியிருக்க மாட்டாரா?
“பிரச்சனையே தந்தை யார் என்றுதானே? தவிமுனிதானே என் தந்தை. சீக்கிரம் ஆமாம் என்று சொல்லுங்கள் நான் போய் அத்ரி முனிவரை வாதில் வென்று நாளைய திவசத்தில் முதல் மரியாதை ஏற்க வேண்டும்.
“என்னால் பொய் சொல்ல முடியாது கிருச்சமதர்.”
“அப்படியானால் அத்ரி முனிவர் சொன்னது உண்மையா? நான் ருக்மாங்தனுக்குப் பிறந்தவன் தானா. அத்ரி முனிவரை வெல்லும் தகுதியை நான் இழந்துவிட்டேனா.. தலை நிமிர்த்த முடியாது போன என் வெட்கத்திற்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்.
“வெட்கப்பட வேண்டியவர் கவிமுனிவர் அல்லவா? உனக்கு ஏன் அந்த வேலை எல்லாம்? பெற்றவள் எப்படிப்பட்டவள் என்றாலும் அவள் பிள்ளைக்குத் தாய்தான். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான் ஆனாலும் கேள்!
கவிமுனிவனுக்குத் தர்ப்பையும், சமித்தும் சேகரித்துத் தரும் அடிமையாக நானும், எனக்குப் பணி ஏவும் முதலாளியாக அவரும் ஒரே குடிலில் வசித்து வந்தோம். அதனாலேயோ என்னை அவர் பத்தினி என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்பதாலேயோ மட்டும் அது உண்மையாகிவிடாது.
கணவனுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. கவிமுனி கவனிக்கத் தவறிய அதை நிறைவேற்றிய மன்னன் ருக்மாங்கதன். நீ பிறந்தாய். உடனே, பெண் பின்னால் மோகித்து அலைபவர் உன் தந்தை என்று அவரைக் கருதி விடாதே.
விரகத்தீயில் நான் வெந்து கொண்டிருக்கும்போது வேட்டைக்கு வந்த அவர் தாகமாய் இருக்கிறது. தண்ணீர் வேண்டும் எனக் கேட்டு வந்தார். மிக ஆழமாய் இருக்கும் அவரைப் பார்த்த பிறகு என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. அது அடங்கவில்லை என்பதுதான் உண்மை. என்னை ஆரத் தழுவி என் தாபத்தைத் தீர்க்கச் சொன்னேன். நாம் இருவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்று மறுத்தார்.
நான் மன்றாடினேன்.
அவர் உறுதியாகவும், இறுதியாகவும் மறுத்து விட்டார். காமத்தால் கண் அவிந்து போயிருந்த நான் கோபத்தில் சபித்தேன். சில காலம் அவர் வெண்குஷ்டம் பிடித்து அலைந்ததாய் கேள்வி.
ஒரு நாள் மனசு மாறி என்னை வந்து சந்தித்தார். அது நான் செய்த பாக்யம். நான் சொல்வது உனக்குப் புரியாது மகனே. இது புரிய வேண்டுமானால் காமநோயில் நீ சிலநாட்களாவது செத்திருக்க வேண்டும். நான் பல ஆண்டுகள் பஸ்பமாயிருக்கிறேன்.”
“இதைச் சொல்ல வெட்கமாயில்லை?”
“குற்றவாளிகள்தான் வெட்கப்படவேண்டும். உனக்கும் எனக்கும் ஏன்?”
முகுந்தை கண்களில் நாம் செய்தது தப்பு என்றோ, அத்ரி முனிவருக்கு துரோகம் இழைத்து விட்டோம் என்றோ சின்ன நடுக்கம் கூட இல்லை. உண்மையில் தலை குனிய வேண்டியதும் அவளல்லவே.
“உன்னை தாய் என்று சொல்ல என் நா கூசுகிறது. உன் பசியின் இரைக்காக என்னைக் களங்க மாக்கி விட்டாய். என் களங்கத்துக்குக் காரணமாக இருந்த உன்னை சபித்தால்தான் என் ஆத்திரம் அடங்கும்.” என்ற கிருச்சமதர்.
“அலைந்து களைத்த பறவைகளும் வந்து இளைப்பாறாத இலந்தை மரமாகப் போ” என்று சபித்துவிட்டு தன் மேல்பட்டிருக்கும் கறை கழுவி தவமிருக்கலாம் என்ற உத்தேசத்துடன் கால்போன போக்கில் நடந்தான் கிருச்சமதர்.
“கிருச்சமதர்.”
ஒரு குரல் எங்கிருந்தது? சுற்றும் பார்க்கிறான். “யார் அழைத்தது?”
“நான்தான் நாரதர்.”
கிருச்சமதர் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து நமஸ்கரித்தான். “முனிபுங்கவரே, உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நான் அழுக்கு என்பதை இன்றுதான் அறிந்தேன். உபாயம் அருளுங்கள்..”
யார் அழுக்கில்லை?
நாரதர் சிரித்தார். அவர் ஞானி . அவர் அறியாத ரகசியங்களா?
“கிருச்சமதர், நீ நினைத்து வருந்துவதுபோல், உன் தந்தை அசுரன் ருக்மாங்கதன் இல்லை. தேவர் தலைவன் இந்திரன். நீ இந்திரன் மகன். முறைப்படி பார்த்தால் முனி பத்தினிக்கும் தேவருக்கும் பிறந்த பிள்ளை.”
கிருச்சமதர் நம்பவில்லை. நாரதருக்குத்தான் கலகமூட்டுவது கைவந்த கலையாயிற்றே. அதனால்தான் இங்கும் கலகமூட்ட கதை விடுகிறார்? என்று நினைத்தார் கிருச்சமதர்.
“என்ன யோசிக்கிறாய்.கிருச்சமதா? நான் சொல்வது நிஜமா என்றா? உன் தாய் ருக்மாங்கதன் மேல் ஏற்பட்ட காதலால் பித்து பிடித்து கானகத்தில் அலைந்ததைப் பார்த்து இந்திரனுக்கு ருக்மாங்கதன் வேடம் போடும் ஆலோசனையை வழங்கியதே நான்தானே.”
“இது பொய்யில்லையே.. முனிவர்களோடு ஞானப்போர் புரிய எனக்கு யாரும் தடைபோட முடியாதே.. என்னோடு போட்டிபோட, முனிவர்கள் தான் இனி வெட்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காதே?”
“நாராயணா..நாராயணா” என்று சொல்லிக் கொண்டே நடந்தார் நாரதர்.
கிருச்சமதர் முகத்தில் படிந்து கிடந்த அசூயை காணாமல் போயிற்று. பௌர்ணமி நேரக் கடல்போல அம்மாமேல் பாசம் பொங்கியது.
கர்வம் பழையபடி கண்களில் ஏறி உட்கார்ந்தது. தலை யாருக்கும், வணங்காத கதியில் இருந்தது.
அம்மாவைத் தேடி ஓடிவந்தான். அதில் அவிழ்த்துவிட்ட காளைக்கன்றின் வேகம். அவசரப்பட்டு அம்மாவை சபித்து விட்டதற்காய் அவன் படுகிற வேதனை முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அழுது புரண்டாலும் – தவமே செய்தாலும் தீராத பழியை செய்துவிட்டதாய் என் மனசு குற்றம் சாட்டியது. பெற்றவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்பதுதான் முதல் வேலை. அவள் மன்னித்தேன் என்று சொன்னபிறகுதான் மறுவேலை.
ஓடி வந்தான். கால் இடறி விழுந்ததையோ – மூக்கில் அடிபட்டதையோ பெரிதாக்காமல் வேகமாய் ஓடிவந்தான். ஆஸ்ரமத்தில் பெற்றவளைக் காணவில்லை. கவிமுனிதான் இருந்தார்.
“அம்மா எங்கே?”
“நீயே தேடிப்பார். இங்குதான் எங்காவது இலந்தை மரமாக நிற்பாள்.”
கிருச்சமதர்க்குள் ஆச்சர்யம் விரிகிறது. ‘நாம் சாபம் கொடுத்த விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது? அப்படியானால் நம் பிறப்பின் ரகசியமும் அறியாமலா இருந்திருப்பார்? இப்படி நினைப்பதைக் கூட கவிமுனி ஞானத்தால் அறிந்து விடுகிறார். சிரிக்கிறார். எல்லாம் அறிந்த நாரதரும் இப்படித்தானே சிரித்தார்.
அவனது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. கிருச்சமதர் பெற்றவளைக் கண்டுபிடித்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசரத்தில் இருந்தான். இல்லையென்றால் கவிமுனியின் அபார ஞானத்தை பாராட்டாமல் வெளியேறியிருக்கவே மாட்டான்.
அம்மாவைத் தேடுகிறான். பூமியில் நிற்கும் எத்தனையோ இலந்தை மரங்களில்.
(தொடரும்)