அத்தியாயம் – 15                                                              மாத்ரி

ப்போது வசந்தகாலம் என்பதால் சதசிருங்க மலைப்பகுதி குமரிப் பெண்ணைப்போல் வனப்புடன் இருந்தது.  மரங்கள் பூத்துக் குலுங்கின.  எப்போது வேண்டுமானாலும் கரை உடைத்துச் சாடும் உத்தேசத்துடன் தடாகங்கள் தண்ணீரால் நிரம்பி நின்றன.

மலர் வாசனையோடு மண்வாசனையும் சுமந்து திரிந்த ஊதக்காற்று காமன் செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தது.  பாண்டு – தன் இளைய மனைவி மாத்ரியை காற்றாட நடந்து வரலாம் என்று சோலைக்கு அழைத்துச் சென்றான்.

வழியிலே இரண்டு சிட்டுக் குருவிகள் முத்தம் கொடுத்துக் கொண்டும், பூக்களை வண்டுகள் முத்தமிட்டுக் கொண்டும், சூழ்நிலையை சூடேற்றிக் கொண்டிருந்தன.  பாண்டுவுக்குள்ளும் வெப்பம் லேசாகப் பரவ ஆரம்பித்தது.  காமம் கண்ணைத் திறந்தது.

இயற்கையை ரசித்துக் கொண்டு நடந்தவன் இப்போது மாத்ரியைக் கவனிக்க ஆரம்பித்தான்.  அணு அணுவாக ரசித்தான்.  எத்தனை அழகாக இருக்கிறாள்.  இத்தனை நாள் அருகில் இருந்தும் இந்த அழகை எப்படி கவனிக்கத் தவறினோம்..?

அவனுக்குள் ஆசை கள்வெறி கொண்டது.

“கண்ணே.. பார்த்து நட.. பாதையில் பாம்புகள் கிடக்கப் போகின்றன.  ” பாண்டு பேசினான்.  குரலில் வழக்கமான கம்பீரம் இல்லை.  வறியவனின் யாசகக் குரலின் கெஞ்சல்தான் அதில் இருந்தது.

திருமணம் ஆகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ‘மாத்ரி’ என்று பெயர் சொல்லியே மனைவியை அழைப்பவன் இன்று புதுசாக ‘கண்ணே! என்கிறான்.  மாற்றத்துக்குக் காரணம் எதுவாக இருக்க முடியும்?

‘வழக்கமாக சோலைக்கு குந்தியோடுதான் வருவார்.  ஒருவேளை குந்தி என்று நம்மை நினத்துவிட்டாரா.. அப்படியானால் நாம் சந்தேகப்பட்டது சரிதான்.  குந்தியோடு தினமும் இவர் சோலைக்கு வருவது கட்டித் தழுவி காதல் கதை பேசத்தான்!’ என்று நினைத்தாள் மாத்ரி.

“அப்படியென்ன அவசரமாய் ஓடுகிறாய் அரசி? இப்படி வா.  இந்த அரச மரத்தடியில் அமர்ந்தபடி பேசலாம்..”

பாண்டுவின் குரல் காதில் நன்றாக விழுந்ததும், கேட்காதவள் போல் தொடர்ந்து நடந்து கொண்டி ருந்தாள் மாத்ரி.  அவளைப் பின் தொடர்ந்த பாண்டு, “நம் மகன் பீமனின் கையிலிருக்கும் கதையால் அடிப்பட்டால்தான் வலிக்கும்.  கதையை ஒத்திருக்கும் உன் பின்னழகு என் கண் எதிரில் அசைந்தாலே வலிக்கிறது தேவி.  போகாதே. வா இப்படி..”

மாத்ரிக்கு இப்போது மிச்சமிருந்த சந்தேகமும் தெளிவாயிற்று.  நம்மை குந்தி என்றே நினைத்து விட்டார்.  இல்லையென்றால் குந்தி மகன்  பீமனை ‘நம் மகன்’ என்பாரா?

பாண்டு மாத்ரியிடம் பேசும்போது மாத்ரிக்குப்  பிறந்த நகுலன், சகாதேவனைத்தான் ‘நம் மகன்’ என்பான்.  தர்மன்,  பீமன், அர்ஜூனனை நமது பிள்ளைகளில் ஒருவனான தர்மன், பீமன் அர்ஜூனன் இப்படித்தான் குறிப்பிடுவான்.

அப்படியானால் குந்தி ஏமாற்றுக்காரியா? வாய் நிறைய தங்கை என்று அழைப்பது வேஷமா?

மாத்ரிக்குள் பல்வேறு எண்ணங்கள் புரண்டன.  பதினைந்து வருடங்களாய் மனதில் இருந்த சந்தேகத்துக்கு இன்று முடிவு கட்டி விடலாம் என்ற நினைப்பு, கூடவே சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது.

பதினைந்து வருடம் முன் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.  அது எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாத கொடுமை.

திருமணம் முடிந்த முதல் முறையாக காட்டுக்குப் போகும்போது நடந்தது.  பாண்டுவின் இடது பக்கத்தில் குந்தி நின்றாள்.  வலதுபக்கம் நின்ற மாத்ரி நுரைக்க ஓடும் ஆற்றை ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போது குந்தி தூரத்திலே நின்ற மானைக் காட்டி அதை அடிக்கச் சொன்னாள்.  பாண்டுவும் குறி தப்பாமல் அடித்தான்.

அடிபட்ட மான் மனிதனாயிற்று.  ஐயோ, என்று அலறியது.  தேரை விட்டிறங்கி ஓடிப்போய் பார்த்தார்கள்.  காவி உடை கட்டிய ஒருவன் மரண வலியில் துடித்துக் கொண்டிருந்தான். பக்கத்திலே ஒரு பெண். அம்பு விடுவதற்கு முன் அவளும் மான் வடிவத்தில்தான் நின்றிருந்தாள்.

மாரீசன் பொய்மானாய் வேடம் போட்டு, ராமனையும், சீதையையும் ஏமாற்றவில்லையா? அப்படி இது யாரை ஏமாற்றப் போட்ட வேஷம் என்று புரியாத மாத்ரி கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

மான் வேடத்தில் மனைவியோடு சந்தோஷம் அனுபவித்துக் கொண்டிருந்தவன் முனிவன் கிந்தமன்.  அவன், ‘பாண்டு இரண்டு பெண்களுக்குப் புருஷன் என்று கூடப் பார்க்காமல் ‘மனைவியோடு இன்பம் அனுபவித்தால் உனக்கு மரணம் ஏற்படும்’ என்று சபித்துவிட்டான்.

கிந்தம முனிவன் தந்த சாபம் – மாத்ரியின் இளமைக் கனவுகளை எல்லாம் பொசுக்கியது.  விதியை நொந்து கொள்வதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

தன் இளமை வீணாகப் போகிறதே என்ற கவலையைவிட குந்தி எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள் என்பதே பெரிய கவலையாக இருந்தது.

குந்தி இரண்டு தந்தையாரின் பாசத்தில் செல்லமாய் வளர்ந்த பெண், பூலோகத்திலுள்ள மன்னர்கள் எல்லாம் அடைய ஆசைப்பட்ட பேரழகுக்குச் சொந்தக்காரி.. கணவனோடு எப்படியெல்லாம் வாழப் போவதாக கனவு கண்டிருப்பாள்.

அவளுக்கு எது ஆறுதலாக அமைய முடியும்?

மாத்ரி – குந்தியை ஆறுதல் படுத்த வார்த்தைகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தபோது-  குந்தி வாந்தி எடுத்தாள்.

குந்தி கருவுற்ற செய்தி அரண்மனை முழுக்க பனைவெல்லம்போல் இனிப்பாகப் பரவியது.  குந்தி சந்தோஷமாக இருந்தாள்.  பாண்டு அதை விட சந்தோஷமாக இருந்தான்.  அவன் வருகிறவர்களுக்கெல்லாம் பொற்காசுகளை அள்ளி வழங்கி தன் சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தான்.

இனி, பாண்டுவுக்கு  சொர்க்கத்தில் இடம் ஒதுக்குவதில் தேவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.  குழந்தை  இல்லாதர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாது என்று ஏற்கனவே இமயமலையில் வைத்து ஒருமுறை பாண்டுவைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.  இனிதான் பாண்டுவுக்குக் குழந்தை வரப்போகிறதே.

குந்தி தாய்மை அடைந்திருக்கும் செய்தி கேட்டு மாத்ரி அதிர்ந்தாள்.  குந்தியைப் பற்றின நினைப்பு சேற்றில் புரளும் பன்றியை நினைப்பதுபோல் ஆயிற்று.

குந்தியின்  வயிற்றில் வளரும் குழந்தைக்கு – பாண்டு தந்தை என்றால் – சாபத்தின்படி உயிர் போயிருக்க வேண்டும்.  வேறொருவன் தந்தை என்றால் மன்னர் எப்படி இத்தனை சந்தோஷமாக இருக்க முடியும்?

மாத்ரி எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள்.

ஒரு வருட இடைவெளியில் இரண்டாவது முறையாக வாந்தி எடுத்தபோது கணவர் பாண்டுவைத் தான் மட்டும் அனுபவிக்க குந்தி ஆடிய நாடகமே காட்டில் நடந்தது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மாத்ரி.  ஆனால், அதைப்பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.

குந்தி மூன்றாவதாகவும் அம்மா ஆனாள்.  அர்ஜூனன் பிறந்தான்.  அர்ஜூனனைப் பார்க்க வந்தவர்கள் அவன் அழகைப் புகழ்ந்த வாயால் மாத்ரியை மலடி என்றும் சொல்ல மறக்கவில்லை.

இதற்கு மேல் மாத்ரியால் பொறுமை காக்க முடியவில்லை.  குந்தியிடம் போனாள்.  “நீ அம்மா ஆன ரகசியம் எனக்குத் தெரிய வேண்டும்” என்றாள்.

குந்தி மிரளவும் இல்லை.  மழுப்ப முயற்சிக்கவும் இல்லை.

“நானே உனக்குச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மாத்ரி.  உன்னை மலடி என்று பேசியதைக் கேட்டேன்.  அடுத்த முறை நீதான் அம்மா ஆகப் போகிறாய்…”

“எப்படி.. அவரில்லாமல் எப்படி?”

“சொல்கிறேன்.  நான் வட மதுரையில் குந்தி போஜனின் வளர்ப்பு மகளாக இருக்கும்போது ஒரு வருடம் துர்வாச முனிவருக்குப் பணி விடை செய்தேன். என் பணிவிடையில் மகிழ்ந்த முனிவர் எனக்கு ஒரு மந்திரம் அருளினார்.  அந்த மந்திரத்தை  சொல்லிக் கொண்டு எந்த தேவரை நினைக்கிறாயோ – அந்த தேவனின் அருளால் குழந்தை பிறக்கும் என்றார்.  அப்படி குழந்தை பெற்றுக் கொண்டேன்.  நீயும் உனக்குப் பிடித்த தேவனை நினைத்து நான் சொல்கிற மந்திரத்தைச் சொல், உனக்கும் குழந்தை பிறக்கும்..”

“நான் நம்பமாட்டேன்.”

“உனக்கு எந்த தேவனைப் பிடிக்கும் என்று சொல். நம்பிக்கையை நான் ஏற்படுத்துகிறேன்.”

“எனக்குப் பிடித்தது அஸ்வினி தேவர்கள்தான்..”

“இந்திரன் , குபேரன், சந்திரன் என்று ஆண்மையுள்ள தேவர்கள் பலர் இருக்கிறார்களே.  அவர்களை விட்டு ஏன் அஸ்வினி தேவர்களை நினைக்கிறாய்?

“அவர்கள் தேவலோக மருத்துவர்கள் அல்லவா? நம் கணவரின் உடம்பில் படிந்திருக்கும் வெள்ளை நோய்க்கு மருந்து கேட்கலாமே..”

அதற்கு மேல் குந்தி எதுவும் கேட்கவில்லை.  காதுக்குள் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னாள்.  “இன்றிரவு  அறைக்குள் போயிருந்து அஸ்வினி தேவர்களை நினைத்து இந்த மந்திரத்தைச் சொல் அம்மா ஆகிவிடுவாய்..” என்றாள்.

மாத்ரிக்கு இன்னும் அதில் முழுசாக நம்பிக்கை வரவில்லை என்றாலும் குந்தி சொன்னபடி செய்தாள்.  சற்றைக்கெல்லாம் கதவைத் திறந்து கொண்டு இரண்டு பேர் நுழைந்தார்கள்.  நாங்கள் அஸ்வின் தேவர்கள் என்றனர்.

“என் கணவரின் வெள்ளை நோய்க்கு மருந்து தாருங்கள்..” என்று கேட்டாள் மாத்ரி.

“முதலில் வந்த வேலை.  பிறகு மருந்து தருவது பற்றி முடிவு செய்வோம்” என்றனர்.

மாத்ரி – அம்மா ஆக்கப்பட்டாள்.

விடிந்ததும் குந்தியை சந்தித்து, “அக்கா, நீங்கள் சொன்னபடியே நடந்தது!” என்றாள் மாத்ரி

மாத்ரி, நகுலன், சத்ருக்கன் என்று இரு பிள்ளைகளைப் பெற்றாள்.  அப்போதும் பாண்டு மிகுந்த சந்தோஷமாக இருந்தான்.  ‘நான் இப்போது பஞ்சபாண்டவர்களுக்கு அப்பா’ என்று சொல்லி ஆனந்தப்பட்டான்.  அவன் உடம்பிலுள்ள வெள்ளை நோய் அப்படியேதான் இருந்தது.

நகுலன், சத்ருக்கன் இருவருக்கும் அப்பா யார் என்று பாண்டு என்றாவது ஒரு நாள் கேட்பான் என்று எதிர்பார்த்தாள் மாத்ரி.  பாண்டு, கேட்கவேயில்லை.

குழந்தைகள் நன்கு வளர்ந்துவிட்டார்கள்.  ஐவரையும் குருகுலத்தில் சேர்த்தாகிவிட்டது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் மிகுந்த வித்தகர்களாக விளங்குகிறார்கள்.  எத்தனை பெருமை!

மன்னன் பாண்டு குந்தியிடம் சிரித்துப் பேசுகிற அளவுக்கு மாத்ரியிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை என்பதைத் தவிர, எந்தப் பிரச்சனையும் இல்லாமல்தான் போய் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

மாத்ரியின் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு சலனம்.

தேவர்கள் பொதுவாக வாக்கு தவறாதவர்கள்.  பாண்டுவுக்கு உள்ள தேமல் நோயைத் தீர்ப்பதாக வாக்கு தந்தார்கள்.  கடைசி வரை நிறைவேற்றவேயில்லை.  ஒரு வேளை வந்தவர்கள் இருவரும் குந்தி அனுப்பி வந்தவர்களோ. காட்டிலே ‘கிந்தமன்’ என்ற முனிவனைக் கொண்டு சூழ்ச்சி செய்ததுபோல் அந்த இரவிலும் சூழ்ச்சி செய்திருப்பாளோ..?

அப்படித்தான் இருக்கும்.  அதுதான் குந்தி என்று நினைத்து மாத்ரியை மடியில் வந்த அமரும்படி அழைக்கிறானோ பாண்டு.

பதினைந்து வருடமாய் மனசுக்குள் கேட்ட கேள்விக்கு இன்று விடை கிடைத்து விடப்போகிறது.

உண்மையைக் கண்டுபிடித்து – குந்தியின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்கிற வெறி உந்தித் தள்ள, பாண்டுவை நோக்கி வருகிறாள் மாத்ரி.

பாண்டு மடியைக் காட்டி, மடியிலே அமர்ந்துக் கொள் என்கிறான்.  மாத்ரி பாண்டுவின் மார்போடு சாய்ந்து படுத்தாள்.  கைகளால் என்னைத் தழுவு என்றான் பாண்டு.  மாத்ரி இதழாலும் அவனை விழுங்கினாள்.

ஊதக்காற்றும் – பூக்களின் வாசமும், ஓடும் நதி பாறையில் மோதும் சள சளா ஓசையும், வறுத்த முந்திரியின் நிறத்திலிருந்த அந்தி நேரமும் துணையிருக்க மாத்ரியை ஆக்ரமித்தான்.  அவள் அணுக்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் புகுந்துவிடும் முடிவுடன் இயங்கினான்.

‘நம் கணவர் மிகுந்த கலாரசிகர்’ நினைத்துக் கொண்டாள் மாத்ரி.

இயக்கம் முடிந்தது.  கூடவே அவன் உயிரும்.

மாத்ரி தவித்தாள்.  கிந்தமன் முனிவனின் சாபம் உண்மை என்பதை உணர்ந்துக் கொள்ள – கணவன் உயிரை விலை யாக்கி விட்டோமே என்று தலையில்அடித்துக் கொண்டு அழுதாள்.  தரையில் விழுந்து புரண்டாள்.

மாத்ரியின் அழுகை கேட்டு – மலையில் தேனெடுக்கும் குறவப் பெண்கள் ஓடி வந்தனர்.  சேதி குந்தியின் காதுக்குப் போயிற்று.  குந்தி ஆஸ்ரமத்துக்குப் போயிருந்த பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

அஸ்தினாபுரத்திலிருந்து திருதராஷ்டிரன் வந்தான்.  குடிமக்கள் வந்தார்கள்.

யார் வந்து என்ன ? எல்லாமும்தான் முடிந்து போயிற்றே?

பாண்டுவின் சிதைக்கு தருமன் நெருப்பு வைத்தான்.  திகுதிகுவென பற்றி எரிந்தது நெருப்பு.

அழுது புரண்டு கொண்டிருந்த மாத்ரி அழுகையை நிறுத்தினாள்.  தீர்மானத்துடன் எழுந்தாள்.

வானம் பார்த்தாள்.

“இறைவா! குழந்தை இல்லாதவர்களுக்கு பிரம்மலோகத்தில் இடம் கிடையாதாமே. என் கணவர் இருக்கும் இடம்தான் எனக்கு சொர்க்கம்.  எனவே, இரண்டு பிள்ளைகளுக்கு நான் தாய் என்பதற்காக என்னை சொர்க்கத்துக்கு அனுப்பி விடாதீர்.  என் கணவர் போகிற இடத்துக்கே நானும் போகிறேன்…” என்றாள்.  நெருப்பில் குதித்தாள்.  நெருப்பு மாத்ரியைச் சேர்ந்து எரித்தது.

எல்லோரும் குந்தியைத் திரும்பிப் பார்த்தனர்.  மன்னன் திருதராஷ்டிரன், நாட்டு மக்கள் என்று எல்லோருடைய கண்களிலும் இந்தக் குழந்தைகளுக்கு அப்பா யார் என்ற கேள்வி இருந்தது.  கேள்வித் தீ குந்தியைச் சுட்டது.

சிதையில் எரிந்த தீ இன்னும் பெரிதாக வளர்ந்தது.  அது காற்றிலே அலைவதைப் பார்த்த குந்திக்கு அது தனக்கு மந்திரம் சொன்ன துர்வாச முனிவனைத் தேடுவதைப் போல் இருந்தது.