அத்தியாயம் – 14                                         சித்ராங்கதை

சித்ராங்கதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவள் பந்தடிக்கும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத சேடிப் பெண்கள் விழுந்தேன், செத்தேன் என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

பந்தடிக்கும்போது கண்களுக்கும், கைகளுக்கும், கால்களுக்கும்தானே வேலை.  செப்புப்பானை களைக் கவிழ்த்து வைத்தது போலிருக்கும் பிருஷ்டங்களுக்கும், சிறு பிள்ளைகள் கட்டும் மணல் வீடு போலிருக்கும் மார்பகங்களுக்கும் இப்போது ஓய்வுதானே.  அவைகள் சும்மா இருக்காமல் துள்ளாட்டம் போட்டு காண்பவர் மனதை சுக்கு நூறாய் பிய்த்தெறிந்து கொல்லுகின்ற விளையாட்டு விளையாடின.

இரண்டு விளையாட்டையும் பார்த்துக் கொண்டே நிற்கிறான் அர்ச்சுனன். அவனுக்கு சித்தம் தடுமாறி பித்தம் தலைக்கேறிவிட்டது.

அண்ணன் தர்மனும், ஆசை மனைவி திரௌபதியும் சந்தோஷமாய் இருக்கும் அறைக்குள் நுழைந்துவிட்டதால் ஏற்பட்ட பாவத்துக்குப் பரிகாரமாக, ஒவ்வொரு புண்ணிய நதியாக நீராடி வரும் வழியில் தான் – இப்படி பைத்தியம் பிடிக்க நின்று கொண்டிருக்கிறான்.

எதற்காக மதுரைக்கு வந்தோம் என்பதை மறந்தான்.  தன் வரவை எதிர்பார்த்து ஒவ்வொரு கணமும் காத்திருப்பதாக திரௌபதி சொன்னதை மறந்தான்.  ஆறாவது விரல் போல கையில் எப்போதும் இருக்கும் காண்டீபத்தை மறந்தான்.  காண்டீபம் கை நழுவி தரையில் விழுந்தது.

அப்போது நாணிலிருந்து புறப்பட்ட ‘கிண்ண்’ என்ற ஓசை கேட்டு சட்டென திரும்பினாள் சித்ராங்கதை.  மந்திரிக்கப்பட்டவன்போல் ஒருவன் நிற்பதைப் பார்த்தாள்.

சித்ராங்கதைக்கு ஆண்கள் என்றாலே ஆகாது.  மதுரையைப் பொறுத்தவரை தந்தை சித்ரவாகன் தவிர, பிற ஆண்கள் அவள் எதிரில் வருவதற்கே அஞ்சுவார்கள்.

அவள் ஒன்றும் ஆண் மாமிசம் சாப்பிடுபவளல்ல. யாரையும் கடித்து தின்றுவிடமாட்டாள்.  போருக்கு கூப்பிடுவாள்.

“பெரிய மீசை வைத்திருக்கிறாய், சபாஷ்.. வீரத்துக்கு அடையாளம்தான்.  கையில் ஆயுதம் இருக்கிறதே.  பெரிய போராளியாகத்தான் இருப்பாய்.  வா போட்டியிடலாம்..” என்று அழைப்பாள்.

சில ஆண்கள் ஆயுதங்களை அவள் காலடியில் வைத்துவிட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுவார்கள்.  சிலர் மோதலுக்குத் துணிவார்கள்.

சித்ராங்கதை வில்வித்தை, வாள்போர், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அத்தனை போர் முறையிலும் கரைகண்டவள்.  அவளது சரித்திரத்தில் தோல்வி என்பது இதுவரைக்கும் இல்லாத ஒன்று.  போரிட்டு தோற்றவர்களை அவள் கொடுமைப் படுத்துவதெல்லாம் கிடையாது.  மீசை வைத்துக் கொள்ளக்கூடாது.  பாண்டிய நாட்டின்தளபதிக்குக் கூட மீசை இருக்காது.

சித்ராங்கதையின் இந்தப் போக்கால் தளபதியிலிருந்து, சாதாரண குடிமக்கள் வரை அவளுக்கு எதிரியாய் ஆனார்கள். சித்ராங்கதையை வீழ்த்த சதி தீட்டினார்கள்.

தன் மகளுக்கு எதிராய் சதி பின்னப்படுவதை ஒற்றர்கள் மூலம் சித்ரவாகனும் அறிந்தான்.  இரவு உறக்கம் தொலைந்தது தவிர அவனால் வேறொன்றும் இயலவில்லை.

மகளா – நாடா என்று வரும்போது நிச்சயம் அவன் நாட்டைத்தான் எடுத்துக் கொள்வான்.  நாடாளும் மன்னன்அப்படித்தான் செய்ய வேண்டும்.

“ஆண் பிள்ளை நமக்கு இல்லையே.  நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு மகளுக்குத்தானே.  எனவே அவள் தன்னைப்போல் வீரத்தில் சிறந்து விளங்க வேண்டுமே! என்று பாட்டும், நாட்டியமும் கற்று தராமல் வில்லும், வாளும் கையாளச் சொல்லித் தந்தான்.  மகள் வீரத்தைப் பார்த்து வியந்தான்.

எந்த வீரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டானோ, அந்த வீரமே இன்று தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி விட்டது.

குடிமக்கள் ஒரு விஷயத்தில் உறுதியாய் இருப்ப தாய் கேள்வி.  பெண்ணொருத்தியின் ஆட்சிக்குக் கீழே அடங்கி நடக்கப் போவதில்லை.  பாண்டிய நாட்டிலே ஒரு வீர மகனைத் தேர்ந்தெடுத்து அரசனாக்க வேண்டும்.  அரசன் இதற்குச் சம்மதிக்க வில்லை என்றால், பெட்டையின் ஏவலுக்கு மண்டியிட விருப்பமில்லை என்று ஓலை எழுதி வைத்து விட்டு விடம் தின்று உயிர் விடுவது…

சித்ராங்கதைக்குத் திருமணம் செய்து வைத்து மருமகனை அரசனாக்கிவிடலாம் என்று  சித்ரவாகன் எடுத்த சில முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

“மகளே, பருவ வயதில் பெண்ணுக்கு மணமுடித்து வைப்பதும், தந்தையின் கடமைகளில் ஒன்று.  உன்னைக் கல்யாண கோலத்தில் பார்க்கும் பாக்கியத்தை எனக்குத் தருவாயா?”- மன்னன். தந்தையாய் மாறி மகளிடம் கெஞ்சினான்.

“தந்தையே.. கணவனுக்கு அடங்கியவளாய் மனைவி இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.  நான் அடங்கி நடக்க வேண்டுமானால் அவன் எல்லா விதத்திலும் என்னைவிட வல்லவனாக இருக்க வேண்டும்.  அப்படி ஒருவனை அழைத்து வாருங்கள்.  உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்… என்றாள்.

எங்கே? சித்ரவாகன் வீரன் என்று அழைத்து வருபவனெல்லாம் சித்ராங்கதை முன் கோழையாகி விடுகிறார்களே?

சித்ரவாகனுக்கு வேறு வழி தெரியவில்லை.  ‘நீ தான் என் மகள் திருமணத்தை எப்படியாவது முடித்து வைக்க வேண்டும், என்று சுமையை சோலைமலை அழகர் மேல் இறக்கி வைத்தான்.

மதுரையில் ஆண்கள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட இடமும் உண்டு.  அது மணலூர்.  மணலூரிலே செயற்கையாய் ஒரு சோலை சிருஷ்டிக்கப்பட்டிருந்தது.  நீராட தடாகம், விளையாட நீரருவி என்று அது பூலோக சொர்க்கம்தான்.  ஆண்களின் மூச்சுக் காற்றுக்கூட அந்தச் சோலைக்குள்  வந்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத விதி.

அந்தச் சோலைக்குத்தான் அர்ச்சுனன் நுழைந்து விட்டான்.  நுழைந்தது  மட்டுமல்லாமல், சித்ராங்கதை விளையாடும் காட்சியையும் பார்த்துவிட்டான்.

இரண்டுமே பெரிய தவறுகள். இதற்கு என்ன தண்டனை தரப்போகிறாளோ சித்ராங்கதை.  குறுவாள்போல் மீசை வைத்திருக்கும் அவனைப் பார்த்ததும் சித்ராங்கதையின் மேனி நாணேற்றிய வில்போல் முறுக்கேறியிருந்தது.  முகத்தில் கூட பெண்மை வடிந்துபோய் வன்மை வந்திருந்தது.

‘இவன் யாரோ எவனே.. வழிப்போக்கனாக இருப்பான்.  இல்லையென்றால் சித்ராங்கதை யின் சோலைக்குள் நுழைந்திருப்பானோ? பாவம் தொலைந்தான்’ சேடிப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே – அர்ச்சுனனை நோக்கி சென்று கொண்டிருந்தாள் சித்ராங்கதை.

அவள் அருகில் சென்று சிங்கத்தின் கம்பீரத்துடன் அவனைப் பார்த்தாள்.

“பாண்டிய தேசத்தவன்போல் தெரியவில்லை.  ஆகவே சோலையில் நுழைந்ததற்கு மன்னிக்க லாம். யார் நீ?”

“எனக்கு உன் மன்னிப்பு வேண்டாம்.  காதல் வேண்டும்.”

கண்டதையும் பேசி வகையாய் மாட்டிக் கொள்ளப் போகிறான் இவன்.  இவன் அதிர்ஷ்டம் சித்ராங்கதை மன்னிக்கும் மனநிலையில் இருக்கிறாள்.  இதைக் கெடுத்து விடுவான் போலி ருக்கிறதே.  அர்ச்சுனன் அழகில் மயங்கிவிட்ட ஒருத்தி ஓடி வந்தாள் – அவனை காப்பாற்ற.

“இவள் யார் தெரியுமா? அல்லிராணி.  பாண்டிய மன்னரின் மகள்.  ஆண்களின் பயம்.”

“எனக்கு இவள் அழகான பெண்ணாக மட்டும்தான் தெரிகிறாள்..”

இதற்குப் பதில் சொல்ல முனைந்த சேடியைத் தள்ளிப் போகுமாறு சைகை செய்த சித்ராங்கதை அர்சசுனனைப் பார்த்து, “என்ன வேண்டும் உமக்கு?” என்று கேட்டாள்.

இதுவரை பொறுமையாய் பேசிக் கொண்டிருக்கும் சித்ராங்கதையை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் தோழியர்.

“நீ .. உனது காதல் இரண்டுமே எனக்குத் தேவைப்படுகிறது!..”

“அது அத்தனை சுலபமில்லை.  அதற்க நீ என்னோடு போரிட்டு வெல்ல வேண்டும்.  நீ எந்த ஆயுதத்தை இயக்குவதில் வல்லவன் என்பதைச் சொல்.  நான் அதே ஆயுதத்தால் போட்டிக்கு வருகிறேன்…” என்றாள் சித்ராங்கதை.

அர்ச்சுனன் சிரித்தான்.  கன்னம் குழிவிழச் சிரித்தான்.  அந்தச் சிரிப்பு சித்ராங்கதையைக் கொஞ்சம் அசத்தியது.

“எனக்குப் போட்டியிடுவதில் நாட்டமில்லை.  என் மனசு காதலையே சுற்றி வருகிறது.  அவசியம் போட்டி வேண்டுமென்றால் என்னைப் போருக்கு அழைக்கும் நீயே எந்தன் ஆயுதம் என்பதையும் முடிவு செய்துவிடு..”

“நீர் ஆழம் தெரியாமல் காலை விடுகிறீர்.”

“எனக்கு நீச்சல் தெரியும் பெண்ணே..”

“நீர் வில்லோடு வந்திருப்பதால் விற்போர் புரியலாம்!” என்றாள் சித்ராங்கதை.

விற்போர் தொடங்கிற்று.  காலை தொடங்கிய போட்டி மாலைவரை சளைக்காமல் நடந்தது.  சித்ராங்கதை என்ன தேர்வு வைத்தாலும் அர்ச்சுனன் வென்றான்.

‘வில் வித்தையில் இவள் எனக்கு நிகரான கெட்டிக்காரி!’ என்பதை அர்ச்சுனன் மனசு ஒப்புக் கொண்டது.

போட்டி முடிகிற மாதிரி இல்லை.

“அதோ பறக்கிறதே நாரை, அதை குறி வைக்கலாம்.  யார் அம்பு அதை வீழ்த்துகிறதோ அவரே வெற்றி பெற்றவர் என்ற முடிவு வரலாம்..” என்றாள் சித்ராங்கதை.

குறி வைத்தார்கள்.

நாரை வீழ்ந்தது.  தோழிகள் ஓடிப்போய் தூக்கி வந்தனர்.

அர்ச்சுனன் விடுத்த அம்பு நாரையின் சிறகிலும், சித்ராங்கதை விட்ட அம்பு நாரையின் காலிலும் தைத்திருந்தது.

‘சித்ராங்கதைக்கு கணவன் கிடைத்துவிட்ட மாதிரிதான்’ என்ற சேதியை! மன்னனுக்குச் சொல்ல, ஏற்கெனவே ஒருத்தி போயிருந்தாள்.

இப்போது ‘கணவன் கிடைத்து விட்டான்’ என்று சொல்ல ஒருத்தி ஓடிக் கொண்டிருக்கிறாள்.

“வில் வித்தைகயில் என்னை வெல்ல ஒருவரால் முடியுமானால் அது அர்ச்சுனனால் மட்டும்தான் என்று இறுமாந்திருந்தேன்.  பறவைக்குக் குறி சிறகில்தான் வைக்க வேண்டும்.  இந்த அல்லிராணி உங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.  நான் சந்திக்கும் முதல் வீரமகனே.. நீங்கள் யார் என்று தெரிந்துக் கொள்ளலாமா?”

“போட்டியில் ஜெயித்தால் காதலிப்பதாய் சொன்னாய்.  நான் ஜெயித்து  விட்டதாய் நீயே ஒப்புக் கொண்டும் விட்டாய்.  நான் யாராய் இருந்தால் என்ன? காதலைத் தொடங்கலாமா?”

“என்றாலும், புருஷன் வம்சத்தை மனைவி அறிவது அவசியமல்லவா.  “இதனை சொல்வதற்குள் கன்னம் சிவந்து, கைகள் நெகிழ்ந்து வெட்கம் படர நாணிவிட்டாள் சித்ராங்கதை.

வெட்கமும், நாணமும் சித்ராங்கதைக்கும் உண்டா என்ற வியப்பில் நின்றனர் அவள் தோழிகள்.

கடவுள் கண் திறந்துவிட்ட செய்தி அறிந்து – மணலூர் சோலைக்கு வந்தான் சித்ரவாகன்.  அர்ச்சுனனை கண்டதும் தேரை விட்டு அவசரமாய் இறங்கினான்.  “தாங்களா..”என்றான்.  அதற்கு மேல் பாண்டியனுக்குப் பேச வரவில்லை.

சித்ராங்கதை வியப்பு தாக்க தந்தை பக்கம் திரும்பினாள்.

“தந்தையே.. இவரை உங்களுக்கு முன்பே தெரியுமா?”

“இவரைத் தெரியாத மன்னவன் பூலோகத்திலும், தேவலோகத்திலும் கிடையாது மகளே.  இவர்.. இவர் அர்ச்சுனன்.”

ஆ!

சித்ரவாகன் சோலைமலை அழகர் கோயிலுக்குச் சென்றான்.  இறைவனுக்கு நன்றி சொன்னான்.

‘கேட்டுக் கொண்டபடியே மாப்பிள்ளை தந்துவிட்டாய்.  இறைவா! இன்னொரு கோரிக்கை.  அர்ச்சுனன் சித்ராங்கதைக்கு முதல் குழந்தை ஆண் மகனாகப் பிறக்க வேண்டும்.  அவனை எனக்கே தந்துவிட அர்ச்சுனன் சம்மதிக்க வேண்டும்.’ தரையில் கால்முட்டி மார்பு பதிய விழுந்து வணங்கி னான்.

புதன்கிழமை துலா லக்னமும், சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து வைத்தான்.

மதுர மரத்தடியில் அர்ச்சுனன் மார்பில் சாய்ந்திருந்தாள் சித்ராங்கதை.

“அல்லிராணி..”

“ம்..”

“ஏதாவது பேசு..”

“ஏன் தேனிலவுக்கு மணலூர் சோலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“இங்குதான் தங்கச்சிலை உன்னைக் கண்டெடுத்தேன்.  இந்த பூமிக்கு வேறு எப்படி நன்றி சொல்வதாம்?” என்ற அர்ச்சுனன் அவளை இழுத்தணைத்து முத்தமிட்டான்.

அர்ச்சுனன் காதல் பெண்களின் சக்ரவர்த்தி என்பதை சித்ராங்கதை கேள்விப்பட்டிருக்கிறாள்.  அது எத்தனை பெரிய உண்மை!

“சித்ராங்கதை , ஆண்கள் எல்லோரையும் இனி மீசை வைக்கச் சொல்லி விடுவதுதானே..”

“ஏன் இப்போது அந்தப் பேச்சு? வெறும் வாயாய் இருப்பதால்தானே கண்டதையும் பேசுகிறீர்கள்.  தாம்பூலம் மடித்து தரட்டுமா?”

“நான் , அர்ச்சுனன் என்பது தெரிந்திருந்தால் போட்டிக்கு வில்லைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டாய், அப்படித்தானே..”

“அப்போதும் வில்லைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். அது காமன் கையிலிருக்கும் கரும்பு வில்லாக இருந்திருக்கும்.”

நாடே ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

சித்ராங்கதைக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது.  மன்னன் சித்ரவாகன் பிடிபடாத சந்தோஷத்தில் திளைத்தான்.  பேரனுக்கு பப்ருவாகன் என்று பெயர் வைத்தான்.  சோலைமலை அழகருக்கு இங்கிருந்தே நன்றி சொன்னான்.

குழந்தையைப் பசியாற்றி தூங்க வைத்த சித்ராங்கதை அர்ச்சுனனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

குழந்தை பிறந்த பிறகு அர்ச்சுனனிடம் நிறைய மாற்றத்தைப் பார்க்கிறாள்.  காரணம் கேட்டால் சிரித்து மழுப்பினான்.

“அரசியாரே அவர் வருகிறார்!” என்ற தகவலை சொல்லிச் சென்றாள் தோழிபெண்.

அர்ச்சுனன் வந்தான்.  அவன் முகத்தில் வழக்கமான குறுஞ்சிரிப்பு காணாமல் போயிருந்தது.

“என்ன நடந்தது?”

“ஒன்றுமில்லை .  நான் புறப்படுகிறேன்.  விடை கொடு சித்ராங்கதை ”

“எங்கு போகிறீர்கள்?

“தீர்த்த யாத்திரை முடிந்து என் நாட்டுக்குப் போக வேண்டாமா?”

“தந்தையிடம் சொல்கிறேன்.  நாளையே நாம் புறப்படாலம்.”

“நீயும் என்னோடு வந்துவிட்டால் – நம் குழந்தையை யார் கவனிப்பது? ஆண் குழந்தை பிறந்தால் எனக்குத் தந்துவிட வேண்டும் என்று உன் தந்தை கேட்டிருந்தார்.  நானும் வாக்கு கொடுத்து விட்டேன்.”

“என் குழந்தையை அவருக்குத் தத்துக் கொடுக்க யாரைக் கேட்டு வாக்கு தந்தீர்கள்?”

“கேட்பவர் உன் தந்தை.  நாட்டை ஆள வாரிசு வேண்டுமென்றார்.  அதற்காகவே இந்தத் திருமணம் என்றார்.  வாரிசுக்காக மன்னவன் யாசிக்கும்போது மறுக்கக் கூடாது தேவி!”

“என் தந்தை எனக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட்டது, நாட்டை ஆள வாரிசு தேடியா? கல்வியும், வீரமும் வாய்க்கப்பட்ட நானும் குழந்தை பெறும் பொறியாகத்தான் பயன்படுத்தப்படுகிறேனா? பாண்டிய மன்னனையே கேட்கிறேன்.பெண் பிள்ளை வாரிசு ஆக முடியாதா என்று கேட்கிறேன்.”

“நாட்டைமன்னவன் ஆண்டாலும் மற்றவர்கள் முடிவுக்கும் செவிசாய்க்க வேண்டும் சித்ராங்கதை.  குடிமக்கள் பெண் அரசாள்வதை விரும்பாவிட்டால் என்ன செய்வது தேவி?”

“ஆண்களைப் பெற்றுத்தரும் பெண், எந்த விதத்தில் ஆணைவிட குறைந்து போய்விட்டாளாம்? மீசை வைத்த கோழையைவிட, சேலை கட்டிய வீரம்தான் நாட்டுக்குத் தேவை என்பது – மக்களுக்குப் புரியாமல் போகலாம்.  மன்னனுக்கும் மந்திரிகளுக்குமா இது உறைக்கவில்லை.  கேட்கிறேன்.  பெண்ணின் வீரத்திற்குப் பதில் சொல்ல முடியாத பேடிகளுக்கு ரோஷம் எதற்கு என்று கேட்கிறேன்..”

ஆவேசமாய் எழுந்து இரண்டுஎட்டுதான் வைத்திருப்பாள்.

தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழுதது.  தாய்மை கோபத்தைக் கொன்று புதைத்தது.  ஓடிச் சென்று குழந்தையை அள்ளி எடுத்து பாலூட்ட ஆரம்பித்தாள்.