மீஞ்சூர்: போராட்டத்தை தடுக்கச்சென்ற போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல்  நடத்திய வடமாநில தொழிலாளர்கள்  29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (வயது 35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.  இவர் சம்பவத்தன்று  இரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காட்டூர் போலீசார் சடலத்தை மீட்டு,   ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த மரணத்துக்கு நீதி கேட்டு  வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த நிறுவனமான எல்அன்ட் டி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். உயிரிழப்புக்கு நஷ்டஈடாக ரூ.25 லட்சம் கேட்டுள்ளனர்.  இதுதொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதன்  முடிவில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பதுக்கு  ரூ.5 லட்சம் கொடுப்பதாக எல்அன்டி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால்,அதை ஏற்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக்காக  எல்அன்டி நிர்வாகத்தின் அழைப்பில் பேரில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார்,  பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் மீது சில  வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசினர்.

 கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதில் செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இதையடுத்து மேலும் போலீசார் குவிக்கப்பட்டு,  ரகளையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தாக்குதல் சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வடமாநில தொழிலார்களின் கலவரத்தால் காட்டுப்பள்ளியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.