சென்னை: கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பியு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகம் அனைவருக்கும் தெரியும் என கூறினார்.
டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் மற்றும் பதாதைகளுடன் பேரவைக்கு வந்திருந்தனர். அவர்கள் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி கொடுக்க மறுத்ததால், அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவர்களை வெளியேற்றிய சபாநாயகர் அப்பாவு ஒருநாஸ் சஸ்பெண்டும் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிவதாது, பேரவையில், “எதிர்க்கட்சி என்கிற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச பலமுறை அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபாநாயகர் எங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறார்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகி உள்ளது. டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியவர், நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால், திமுக செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம் என கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்? மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்கிறார் என கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி,
முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்னும் 9 மாதம் மட்டுமே ஆட்சி உள்ள நிலையில், அவர் வெளியிட்டு அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசுடன் 16 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த போது திமுக அரசு என்ன செய்தது? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அரசு தான். தமிழ்நாட்டிற்கு திமுக அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்”
இவ்வாறு கூறினார்.