சென்னை: மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்திலிருந்து சுமார் 2.5 மணி நேரத்தில் இங்கு சென்று விடலாம். இந்த தீவு ஒரு காலத்தில் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் கண்காணிப்பில் இருந்தது. தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியாகவும் திகழ்ந்தது. ஆனால், அரசியல் லாபத்துக்காக அப்போதைய திமுக அரசு, மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இதனால், தற்போதுவ இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்வோரை இலங்கை கடற்படை கைது செய்யும் அட்டூழியம் தொடர்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவில் 1913ம் ஆண்டு புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. இயற்கைச் சீற்றம், புயல் போன்ற பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியாருக்கு வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது மீனவர்களின் வழக்கம். ஆனால் தற்போது அந்த தீவு இலங்கை கட்டுப்பாட்டில் இருப்பதால், நமது மக்கள், அங்குள்ள கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் அந்தோணியார் திருவிழாவுக்கு செல்ல இலங்கை அரசின்அனுமதியுடன் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அடையாள அட்டையுடன் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டு, மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் இலங்கை , யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை சுகாதாரத்துறையினர், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆட்சியர், மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் பக்தர்களும், இலங்கையிலிருந்து 10 ஆயிரம் பக்தர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இ
துகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யபட உள்ளது.