சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் நேற்று மாலை புறப்பட்டது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் நவம்பர் 17ந்தேதி முதல் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ளது. நிகழ்ச்சியில், . இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. மேலும், தமிழ்நாட்டை பிரதிபலிக்கும்,  தமிழக கலாச்சார விழா, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி, கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற நடனங்கள் பொய்க்கால் குதிரை போன்றவைகளும் அரங்கேற்றப்பட உள்ளது. அதற்கான குழுவினரும் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் இந்தியன் ரயில்வே 13 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து,  நவம்பர் 16, 23, 30, மற்றும் டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காசி பனாரஸ் விரைவு ரயில் மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி வசதி இணைக்கப்படுவதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முதல் ரயில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து  புறப்பட்டு சென்றது. அதில், ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு முதல் குழு புறப்பட்டு சென்றது. அவர்களை இந்து அமைப்பினர், பாஜக தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். முதல் நாள் வாரணாசிக்கு ரயிலில் செல்லும் குழுவில் 216 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னையில் இருந்தும் செல்கின்றனர். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்வின் அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதி தலைவர் பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும்,  வரும் 19 ஆம் தேதி வாரணாசி லோக்சபா தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.