ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ ஆள் சேர்க்கை முகாமில் சுமார் 2000 இளைஞர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐநா பாதுகாப்புச் சபை உள்ளிட்ட பல இடங்களில் இது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது என புகார் அளித்து வருகிறது. ஆயினும் பாகிஸ்தான் புகார்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ஆள் சேர்ப்பு முகாம் நேற்று ஸ்ரீநகரில் நடந்தது. இந்த முகாமில் பொதுச் சேவை வீரர், எழுத்தர், மற்றும் துறைப் பட்டயம் பெற்றோர் ஆகியோருகான தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். இதில் முதல் கட்டமாக உடல் தகுதித் தேர்வு நேற்று நடந்தது. நேற்றைய முகாமில் சுமார் 2000 இளைஞர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ஒரு மூத்த ராணுவ அதிகாரி, “இதற்கு முந்தைய முகாம்களில் அதிகபட்சமாக 1200 பேர்கள் வரை கலந்துக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய முகாமில் முதல் நாளான நேற்று மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முகாமில் இவ்வளவு பேர் கலந்துக் கொண்டது வரவேற்கத்தக்கது.
இளைஞர்கள் பெருமளவில் ஆர்வத்துடன் இந்த முகாம்களில் கலந்து கொள்வதன் மூலம் இந்த முகாம் பெரும் வெற்றியைக் கந்துள்ளது. இந்த வெற்றி காஷ்மீர் வாழ் இளைஞர்களிடையே ஒருமைப்பாட்டை மதிக்கும் உணர்வு உள்ளதைக் காட்டுகிறது. இளைஞர்கள் மத்தியில் இந்த நாட்டுக்குப் பணி ஆற்ற வேண்டும் என்னும் எண்ணம் மிகவும் உள்ளது” எனக் கூறி உள்ளார்.