பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர்: யூரி தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் பலியானார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாரமுல்லா நகர். இங்கு 46 ராஷ்டிரிய ரைபிள் படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று இரவு 10.30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலியானார். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் இரு முனைகளிலிருந்து ராணுவ முகாமைத் தாக்கியுள்ளனர். ஒரு பிரிவு, குல்னார் பூங்காவிலிருந்தும், இன்னொரு பிரிவு ராணுவ முகாமின் முக்கிய நுழைவாயிலில் வழியாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்தாதல் பயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. அந்த வகையில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் நோக்கத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு, இதே பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யூரியில் உள்ள ராணுவ முகாமை பயங்கரவாதிகள் தாக்கினர். அதில் 19 ராணுவத்தினர் பலியானார்கள். மரணமடைந்தனர். யூரி தாக்குதலால் வெகுண்ட இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக புகுந்து பயங்கராவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகும் பயங்ரவாதிகள் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டை தொடருவதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.