ரஜோரி,
காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காஷ்மீரி உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியபிறகு, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 60-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தான் தரப்பிலும் உயிர்ச்சேதமும், சிப்பாய்கள் காயம் அடையும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த தாக்குதல்கள் ஓய்வின்றி நடந்து வருவதால் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் 4 ராணுவ நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டது.
தொடர்ந்து காஷ்மீரில் எல்லையோரம் அமைக்கப்பட்டு உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில வாரங்களாக பயங்கர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.
சர்வதேச எல்லையோர மாவட்டங்களான ஜம்மு, பூஞ்ச், கதுவா, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் இந்த தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த காட்டு மிராண்டித்தனத்துக்கு இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
kasmir
அந்தவகையில் நேற்று வரை 8 வீரர்கள், 3 பொதுமக்கள் என 11 பேர் பலியாகி இருந்தனர். மேலும் 40–க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் கிராமவாசிகள் ஆவர்.
தொடர்ந்து எல்லையில் இரு தரப்புக்கும் ஓயாமல் சண்டை நடந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நேற்றும் அத்துமீறிய தாக்குதலை தொடங்கியது.
எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டன.குறிப்பாக பூஞ்ச் மாவட்டத்தின் பாலாகோட், மெந்தர் செக்டார்களில் காலை 9 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது.
120 மி.மீ., 82 மி.மீ. பீரங்கி குண்டுகளாலும், தானியங்கி மற்றும் சிறிய ரக ஆயுதங்களாலும் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில் பாலாகோட் செக்டாரில் உள்ள கொலாட் கிராமத்தை சேர்ந்த ரஷிமா பீ மற்றும் அவரது மகள் நாஸ்மா அக்தர் ஆகிய 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்களில், ரஷிமா பீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பகுதியில் மதியம் நடந்த தாக்குதலில் 2 பெண்கள் மற்றும் ஒரு வீரர் ஆகியோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே ரஜோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடுத்தது.
இதில் தற்குண்டி பகுதியில் பணியில் இருந்த இந்திய வீரர் ஒருவர் பலியானதாக ராணுவத்தின் வடக்கு படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் கூறினார்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிகல்’ தாக்குதலுக்குப்பின் எல்லையில் 60–க்கும் மேற்பட்ட அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.