வாஷிங்டன்

மெரிக்க அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு தர்ப்பு பேச்சு வார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தராக செயல்படத் தயாராக உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்தியா அதை மறுத்தது. மேலும் பாகிஸ்தானுடன் மத்தியஸ்தம் பேச அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இருவரும் ஆப்கான் அமைதி உள்ளிட்ட  பலவற்றைக் குறித்து பேசியதாகத் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபரைச் சந்தித்த பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “காஷ்மீர் பிரச்சினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியது. ஏற்கனவே பாகிஸ்தான்  சார்பில் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அன்று முதல் இன்று வரை இந்த விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு துருவங்களாகவே உள்ளன.

நான் இந்தியாவும் பாகிஸ்தானும் இது குறித்துப் பேசும் போது அமெரிக்காவும் உடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதிபர் டிரம்ப் இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இதை நான் உலகில் உள்ள 13000 கோடி  மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். அமைதியில் இந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறான அமைதியை நாடும் மக்களுக்காக அமெரிக்க அதிபர் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய வந்துள்ளார். நான் அவர் முடிவை வரவேற்கிறேன். இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடக்குமா எனப் பலரும் கேட்கின்றனர். ஆனால் இந்தியா அணு ஆயுதங்களை கை விட்டால் நாங்களும் அதைச் செய்யத் தயாராக உள்ளோம். அணு ஆயுத போர் தொடங்கினால் இரு நாட்டுக்கும் அது அழிவைத் தேடித் தரும்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வினால் இரு நாடுகளின் எல்லைகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். எனவே இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் உதவியை நான் கோரினேன்.  உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்கா விளங்குவதால் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே அமெரிக்கா மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும். காஷ்மீர் பிரச்சினையால் இரு அண்டை நாடுகளும் ஒற்றுமையுடன் வாழ முடியாத நிலை உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.