ஸ்ரீநகர்
காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவது நிற்க ராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பிரதிநிதி தினேஷ்வர் சர்மா கூறி உள்ளார்.
காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு பிரதிநிதியாக மத்திய அரசால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தினேஷ்வர் சர்மா நியமிக்கப் பட்டுள்ளார். அம்மாநிலத்தின் அமைதிக்காக அவர் பல முறை காஷ்மீர் மாநிலத்துக்கு சென்று அங்குள்ளவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
அவர் தனது முதல் காஷ்மீர் பயணத்தின் போது கல்லெறியும் தீவிர வாதிகள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என காஷ்மீர் முதல்வரிடம் கூறினார். அதையொட்டி முதல்வர் அந்த வழக்குகளை நல்லெண்ண அடிபடையில் ரத்து செய்வதாக நவம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் அதன் பிறகும் கல்லெறிதல் தொடர்வதாக ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் கூறி உள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே காஷ்மீரில் எல்லை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. இதில் பல பொதுமக்கள் மரணம் அடைகின்றனர். இதற்கு தினேஷ்வர் சர்மா, ”பொதுமக்கள் கொல்லப்படுவது நிற்க வேண்டும். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தும் போது பொதுமக்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.