பெங்களூரு,

ம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் முயற்சி காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைதியை மோடி அரசு ஓராண்டில் சீர்குலைத்துள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மலிவு விலை உணவகமான ‘இந்திரா கேன்டீன்’ திறந்து வைத்தார். பின்னர், மாலையில் நடைபெற்ற கட்சி தொண்டர்களுடனான கூட்டத்தில் பேசினார்.

அப்போது, 10 வருட தீவிர முயற்சி காரணமாக  நாங்கள் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம். ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதனை ஒரே மாதத்தில் சீர்குலைத்து விட்டது என கடுமையாக சாடினார்.

இந்த ஆண்டு பிரதமர் மோடி சுமார் 57 நிமிடங்கள் மட்டுமே சுதந்திர தின உரையாற்றினார். கடந்த 4 ஆண்டுகளிலே இதுதான் அவரது குறைந்தபட்ச   நேர உரையாகும். இதன் மூலம், அவருக்கு உரை நிகழ்த்த எதுவுமே இல்லை என்று நினைத்துவிட்டார்.

எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டிருந்த மோடி, ஆண்டுடொன்றுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறியிருந்தார்.  ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது. இதனை தனது சுதந்திர தின உரையில் நரேந்திர மோடி குறிப்பிடவில்லை.

மேலும், தற்போது  இந்தியா சீனாவுக்கு இடையேயான எல்லை பிரச்சினைகாரணமாக அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால்,  இந்தியாவிற்கு வந்த சீன அதிபரை, பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றபோது, ஆயிரக் கணக்கான சீன வீரர்கள் நமது எல்லைக்குள் நுழைந்து விட்டனர். இன்னமும், சீன படைகள் பூடான் பகுதியில் இருந்து வருகிறது என்றும் கூறினார்.

பாரதியஜனதா ஆட்சி செய்துவரும், உ.பி.மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில்,  90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு, அவரது சுகாதார கொள்கைதான் காரணம். இதை ஏன் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு அவர் பேசினார்.