சென்னை: குப்பை கூளங்களாக, மாசு படிந்த இடமாக காணப்படும் காசி மேடு கடற்கரையை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை போல அழகுற மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதுதொடர்பான ஆரம்ப கட்ட வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது.
காசிமேடு கடற்கரையில் குப்பைகள், கடலில் கலக்கும் கழிவுநீர், காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் அதிகம். ஆனால் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கடற்கரையானது பெசன்ட் நகர் கடற்கரையை போன்று எழிலுடன் காணப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசி மேடு பீச், பெசன்ட் நகரின் எலியட்ஸ் கடற்கரையைப் போல அழகுற வடிமைக்கவும், பொதுமக்கள் உலாவும் பகுதிகள் , நீரூற்றுகள் கொண்ட பிளாசா, உணவு அரங்கம், விளையாட்டுப் பகுதி, கழிப்பறைகள் மற்றும் காசிமேடு மீன் என்று அழைக்கப்படும் சிற்பம் போன்றவற்றுடன் அழகாக்கும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இறங்கி உள்ளது.
அதன்படி, காசிமேடு மீன் மார்க்கெட் மற்றும் எண்ணூர் விரைவுச்சாலை மற்றும் வடக்கு டெர்மினஸ் சாலை சந்திப்பு வரையிலான 1.5 கி.மீ தூரத்திற்கு சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, அழகுற மாற்றுவதற்கான ஆரம்ப வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) மூத்த திட்டமிடல் அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி உள்ளனர். ஆய்வின்படி, அந்த பகுதி மீனவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி இறங்குளம் உள்ள பகுதி என்பதால், காசிமேடு கடற்கரையின் முழு பகுதியையும், அழகான கடற்கரையாக உருவாக்க முடியாது என்பதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை, அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சிஎம்டிஏ நடத்திய மூன்றாவது மாஸ்டர் பிளானுக்கான தொலைநோக்குப் பயிற்சிக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் சிஎம்டிஏ அமைச்சர் பி கே சேகர் பாபு மற்றும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, காசி மேடு கடற்கரையை “வடசென்னையில் மெரினா கடற்கரை போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததாகவும், அங்கு பொதுமக்கள், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும் வகையில், வசதிகள் செய்யப்படவும், பெஞ்சுகள் கொண்ட ஓய்வு இடங்கள், யோகா வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், மெரினா கடற்கரையில் உள்ளதைப் போன்ற உணவுக் கடைகள் போன்றவை அமைக்கப்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வு கூட்டத்தில், காசிமேடு கடற்கரையை, பெசன்ட் நகர் கடற்கரை போல அனைத்து வசதிகளுடன் கூடிய எழில்மிகு கடற்கரையாக மாற்றுவதுடன், ன், குழந்தைகளின் நலனுக்காக ஸ்கேட்டிங் மைதானமும், குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு தகுதி வாய்ந்த பயிற்சியாளர் நியமிகவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, தற்போது சிஎம்டிஏ ஆரம்ப வடிவமைப்பை சிஎம்டிஏ தயாரித்துள்ளது. அதன்படி காசிமேடு கடற்கரை நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்த கடற்கரையில், வட சென்னையின் பூர்வ குடிமக்களான மீனவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின்கலாச்சாரம் மற்றும் உணவை மேம்படுத்தும் வகையிலான சிற்பங்கள் இடம்பெற உள்ளது. ஒரு பிளாசாவின் நடுவில் ஒரு மீன் சிற்பம் சிகாகோ பீன் மாதிரியாக இருக்கும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு அமைப்படும் பிளாசாவில் கேலரி போன்ற இருக்கைகள் இருக்கும். அங்கு தினசரி “மாலையில் இசை நிகழ்ச்சிகளும் தெரு நாடகங்களும் நடக்கும். மீனவ சமூகம், அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் பற்றிய விவரங்களை விளக்கும் பலகைகள் நடைபாதையில் வைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கூறிய சிஎம்டிஏ அதிகாரிகள், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு இணையாக காசிமேடு கடற்கரையை நவீனப்படுத்தி அதிக கூட்டத்தை வரவழைக்க வேண்டும் என்பதே எங்களது யோசனை. மேலும், கடற்கரையை அணுகுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை ஒன்று உள்ளது. கடற்கரையில், எண்ணூர் விரைவுச்சாலை அமைந்துள்ளது. இங்கு எப்போதும், கனரக வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கிறது. இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. அதனால், கடற்கரைக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் பேசி, பிரத்யேக பார்க்கிங் இடங்களை ஏற்பாடு செய்வோம். மக்கள் எளிதாக சாலையை கடக்க சிக்னல்கள் அமைக்கப்படும் என்றவர், தற்போது அங்குள்றள சர்வீஸ் ரோட்டில் ஆங்காங்கே வாகன நிறுத்தம் உள்ளது. இது கடற்கரை காட்சியை முற்றிலும் மறைக்கிறது”. அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
காசிமேடு கடற்கரை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, பொதுமக்களின் பொழுது போக்கு இடமாக மாற்றப்பட்டதும், வடசென்னையில் சிறந்த கடல் உணவு கிடைப்பதால், அந்த பகுதியில், ஸ்டால்கள் அமைக்க மீனவர்களை ஊக்குவிப்போம் என்றவர்கள், உணவுக்கடைகளை அமைப்பதன் மூலம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு சிறந்த நடவடிக்கையாகும். மீனவர்களின் வாழ்க்கைச் சுற்றுலாவையும் மேம்படுத்தலாம்,” என்றும் தெரிவித்துள்ளனர்.
வடசென்னை மக்களின் நெடுநாள் ஆசை 2024ம் ஆண்டுக்குள் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.