டெல்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்கும் குழுவினருக்கு  உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக  மாறுபட்ட கருத்துக்கள், வீடியோக்கள் உலவியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, த வக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

மேலும் சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அஜய் ரஸ்தோகி குழுவில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டிராத தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,  கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே உச்சநீதிமன்ற  உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி சிபிஐ விசாரணைக்கு உதவ சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், தமிழ்நாட்டு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகளான சுமித் சரண் (சிஆர்பிஎப்- டெல்லி), சோனல் வி.மிஸ்ரா (எல்லைப் பாதுகாப்புப் படை) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.