கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு”, என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது.
ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், “நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்”, என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான்.
இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.
கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின்பக்கம் உள்ளது.
ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.