கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது.

கண்ணூர் அருகில் உள்ள மடிகை பஞ்சாயத்தில் உள்ள இந்த கோயிலுக்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் இதுவரை அனுமதித்ததில்லை.

படங்கள் நன்றி தி இந்து

இந்த நிலையில், கோயிலுக்குள் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களையும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகக் குழு விவாதித்தது.

‘தேவ பிரசன்னம்’ எனும் ஐதீக முறைப்படி 700 ஆண்டுகால வழக்கத்தை ஒழித்து அனைவரையும் சமமாக நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் ‘தெய்யம்’ எனும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியைக் காண வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் என்ற போதும், இதுவரை அவர்கள் அந்த கோயில் வளாகத்திற்கு வெளியில் இருந்தபடி தான் பார்க்க அனுமதிக்கப்பட்டனர், இனி அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட எந்த தடையுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் குலதெய்வ வழிபாடும் குடும்ப கோயில்களின் எண்ணிக்கை அதிகம் என்ற போதும் காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவு வாழும் இஸ்லாமியர்கள் அவ்வப்போது இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதும் இந்து கோயிலுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.