சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், வழக்க தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான குழு கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. கரூர் சம்பவம் நடைபெற்ற இடம் உள்பட பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து விசாரணை நடத்திய நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.