பாராளுமன்ற மேலவையில் அ.தி.மு.க. எம்.பியான நவனீதகிருஷ்ணன், “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று திரைப்பாடலை ராகம் போட்டு பாடியது பலதரப்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில், “நீங்க நல்லா இருக்கோணும்..” என்ற திரைப்பாடலை ராகம்போட்டு பாடினார் அ.தி.மு.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ்.
இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் வனவளத்தை பெருக்குவது குறித்தும், சிறைச்சாலை பாதுகாப்பு குறித்தும் விதி என் 110-ன் கீழ் இரு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
முதலில் பாராட்டி பேசிய கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேய சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு, முதலமைச்சரின் 110-ன் விதிகளுக்கு கீழ் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைப் பாராட்டி பேசினார்.
அடுத்து, திருவாடாணை தொகுதி உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் பாராட்டி பேசினார்.
அப்போது அவர், “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் நீதித்துறைக்கு சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
பிறகு, “நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…” என்ற திரைப்பாடலை ராகம் போட்டு பாடினார்.
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி, நவனீதகிருஷ்ண் பாடியதை, ஊக்குவித்தார் அவையை நடத்திய குரியன்.
இங்கும் கருணாஸ் பாடலை ரசிக்கு கேட்டார் சபாநாயகர். அதோடு, அமைச்சர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கருணாசின் பாடலுக்கு தாளம் போட்டனர். இதையெல்லாம் மகிழ்ச்சிப் புன்னகையோடு, ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
“பாராளுமன்றத்தில் எம்.பி., பாடியதற்கு எசப்பாட்டாக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. பாடிவிட்டாரோ..” என்று சபை நடவடிக்கையை மேல் மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் சிலர் கமெண்ட் அடித்தனர்.
“நந்தா” என்ற திரைப்படத்தில், லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் நடித்த கருணாஸ், ஒரு காட்சியில், பாடல் பாடியபடியே ஒரு வீட்டில் புகுந்து திருடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.