சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்வும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தவெக அலுவலகத்தில் பூட்டு உள்ளே போட்டு இருக்கிறதா? அல்லது வெளியே போட்டு இருக்கிறதா? என்பது பனையூர் சென்று பார்த்தால் தான் தெரியும், பாஜக கம்போஸ் செய்த பாட்டிற்கு நன்றாக நடனமாடும் நடிகராக விஜய் கிடைத்துள்ளார் என குற்றம் சாட்டியதுடன், பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறியதாவது, “அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மருது சகோதர்கள் குருபூஜைக்கும், 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன்.
பாஜகவை எதிர்த்து, அவர்களின் அனைத்து சவால்களையும் சமாளித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை விஜய் சந்திக்காதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியதுடன், பனையூரில் பூட்டு உள்ளே போட்டிருக்கிறதா? அல்லது வெளியே போட்டிருக்கிறதா? என்று போய் பார்த்தால் தான் தெரியும். என்றார்.
அரசியல் என்பது மக்களுக்கானது. அப்படி அரசியலில் இருப்பவர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு சென்றிருக்க வேண்டும். அதனை செய்ய தவறியவர்களை என்னவென்று சொல்வது? என கடுமையாக விமர்சித்தவர், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நள்ளிரவே அங்கு சென்று, ‘உங்களுக்காக நான் இருக்கிறேன்’ என்று சொல்லக் கூடியவர் தான் உண்மையான தலைவர்.

அந்த வகையில், கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது களத்தில் இறங்கி பணியாற்றியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று புகழாரம் சூட்டியதுடன், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் (விஜய்), அவருடைய கட்சியினர், ரசிகர்கள் உயிரிழந்த சூழலில் வெளியே வராமல் இருக்கிறார் என்றால் தவெக தலைவர் விஜய் மக்களுக்கானவரா? மக்கள் பிரச்சனைக்கு களத்தில் இறங்க கூடியவரா? என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
பாஜக குறித்த கேள்விக்கு பதில் கூறிய கருணாஸ், பாஜக எப்போதுமே நேரடியாக வராது. ஆனால், சந்தில் சிந்துபாடி பாட்டை கம்போஸ் செய்வதற்கு நினைப்பார்கள். அதன்படி, பாஜக கம்போஸ் செய்த பாட்டிற்கு நன்றாக நடனமாடும் நடிகராக விஜய் கிடைத்துள்ளார் என்றார்.
அ திமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், அதிமுக புரட்சி தலைவர் உருவாக்கிய மாபெரும் இயக்கம். என்னை போன்றவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த கட்சி. ஆனால், இன்று அதிமுக நடத்தும் கூட்டத்திற்கு அந்த கட்சியின் கொடியை பிடிக்காமல், தவெக கட்சிக் கொடியை அவர்கள் நிர்வாகிகளே பிடித்துள்ளனர். இவை அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தலைமை தான் காரணம். பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் எடப்பாடி என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
தனக்காக மாபெரும் இயக்கத்தை, எந்தவிதமான ஒரு கட்டமைப்பும் இல்லாத ஒரு ரசிகர் கூட்டத்தை நம்பி, இவர்களே செட் செய்து கொடியை ஏந்தி நிற்கிறார்கள். இதனை கண்டதில் இருந்து அதிமுக தொண்டர்கள் பலரும் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் முதல் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய சுயநலத்திற்காக அக்கட்சியை (அதிமுக) கூட அடமானம் வைத்து விட்டு போனாலும் போவார். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கருணாஸ் தெரிவித்தார்.