சென்னை:

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை அகற்றியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடக்கிறது.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அடங்கியிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றியிருப்பது அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகம். சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டது திரையுலகத்தையும், சிவாஜியின் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயல். சிறு பிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளையும், சிவாஜி மற்றும் கருணாநிதிக்கு செய்யும் துரோகத்தையும் தமிழ் திரையுலகம் மன்னிக்காது’’ என்றார்.